பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் அவர்களின் வேதனைகளை புரிந்து கொண்டவர்கள் ஆங்காங்கே நாப்கின் எரியூட்டும் இயந்திரங்களை வைத்திருக்கிறார்கள். இந்த இயந்திரம் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மட்டுமின்றி கல்லூரி, பள்ளிகளிலும் அவசியமானது என்று அடிக்கடி அமைச்சர்களும், அதிகாரிகளும் கூறிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் மாணவிகள் படும் அவதி சொல்ல முடியாத நிலையில் உள்ளது. பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் மாதவிடாய் காலங்களில், நாப்கின்களை எரியூட்டும் இயந்திரம் செயல்படாததால் மாணவிகள் மிகுந்த அவதிக்குள்ளாக்கின்றனர். இதில் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்.
புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் சுமார் 3 ஆயிரம் மாணவிகள் படிக்கிறார்கள். அங்கே நாப்கின் எரிக்கும் இயந்திரம் ஒன்று கூட செயல்படவில்லை. அதனால் அந்த வளாகம் எங்கும் நாப்கின்களாக பரவிக் கிடப்பது அசிங்கமாக உள்ளதாக கூறும் மாணவிகள். எங்கள் வேதனையை புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் என்ன செய்ய முடியும். எங்களுக்கான கழிவறைகளை கூட சுத்தம் செய்வதில்லை. அதனால் நோய்கள் பரவி வருகிறது. இதே போல தான் அருகில் உள்ள மகளிர் பள்ளியின் நிலையும். சில ஆண்டுகளுக்கு முன்பு கழிவறை இல்லை என்பதால் 150 மாணவிகள் ஒரே நேரத்தில் வெளியேறினார்கள்.
இந்த நிலைமை ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ளதாக மாணவிகள் தெரிவித்தனர். கழிவறைகளுக்காகவும், நாப்கின் எரிப்பு இயந்திரத்திற்காகவும் ஒதுக்கப்படும் நிதிகள் என்னாச்சு என்று அரசுக்கு மாணவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்? கடந்த மாதம் இந்திய மாணவர் சங்கம் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் மாணவிகள் வீதிக்கு வந்து போராடினால் தான் நடவடிக்கை இருக்கும் என்றால் போராடவும் தயாராகிவிட்டோம் என்கிறார்கள் மாணவிகள்.