கடந்த 17.10.2018 இரவு மணிக்கு கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகிலுள்ள சம்பந்தம் கிராமத்தை சேர்ந்த சடையாண்டி என்பவரின் மனைவி யசோதா (70) என்பவர் தனது இட்லி கடையில் வெங்காயம் நறுக்கிக் கொண்டு இருக்கும்போது அடையாளம் தெரியாத ஒருவர் பின்பக்கமாக வந்து கழுத்தில் கத்தியை வைத்து 'கழுத்தில் இருக்கும் நகையை கொடு' என்று கேட்டு மிரட்டியுள்ளார்.

அதற்கு யசோதா தரமறுத்ததால் கழுத்தில் இருந்த செயின், தோடு, கம்மல் என 5 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு, ஓடிவிட்டதாக யசோதாவின் மகன் கதிர்வேல் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அவ்வழக்கு சம்மந்தமாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன், காயம்பட்ட யசோதாவை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். அத்துடன் சிகிச்சையில் இருக்கும் யசோதாவோக்கு புனிதா, லதா என்ற இரண்டு பெண் காவலர்களையும் பாதுகாப்பிற்காக நியமித்தார்.

மேலும் கழுத்தில் காயம் பட்டு, பேசமுடியாத நிலையில் சிகிச்சையில் இருந்த யசோதையிடம் புனிதா என்ற பெண் காவலர் சைகை மூலம் விசாரணை மேற்கொண்டதில் 'உங்களை தாக்கியது ஆணா? பெண்ணா?' என்ற கேள்விக்கு 'பெண்' எனவும், பாட்டி 'ம... ம... ம...' என கூறியபோது மஞ்சுளாவா?' என பெண் காவலர்கேட்க, 'ஆமாம்' என பாட்டி சைகை மூலம் கூறியதால் 'மஞ்சுளா' யார் என தேடி விசாரணை செய்ததில் நடுத்திட்டு தங்கவேல் என்பவரின் மகள் மஞ்சுளா (எ) பாத்திமா (30) என்பவரை பிடித்து விசாரணை செய்த போது குற்றத்தை ஒப்புக்கொண்டு மூதாட்டியிடம் பறித்த நகைகளான 4 பவுன் ஜெயின் மற்றும் தோடு ஆகியவற்றை கட்டிட மேஸ்திரி காத்தவராயன்குப்பம் நாகலிங்கம் என்பவரிடம் கொடுத்து பரங்கிப்பேட்டை ஜெயின் ஜுவல்லரி கடையில் ரு 77.000 அடகு வைக்கப்பட்டது
தெரிய வந்தது.

அதையடுத்து பரங்கிபேட்டை காவல் ஆய்வாளர் செல்வம் குற்றவாளிகளை கைது செய்து பவுன்செயின், தோடு கைப்பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் குற்றவாளிகள் பற்றி சாதுர்யமாக உண்மையை வரவழைத்த பெண் காவலர் புனிதா மற்றும் உயிருக்கு போராடிய யசோதா மூதாட்டிக்கு உரிய நேரத்தில் தீவிர சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய சிதம்பரம் அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவ அதிகாரிகள்,மற்றும் மருத்துவர்களை காவல் கண்காணிப்பாளர் சரவணன் பூங்கொத்து கொடுத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.