ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஜூலி பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஜூலி தற்போது அம்மன் தாய் என்ற படத்தில் நடிகையாக நடித்து வருகிறார். இதே தருணத்தில் பல சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கும் ஜூலி, கடந்த சில நாட்களுக்கு முன் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து தலைமைக் காவலரை தாக்கிய வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் பதினோராம் தேதி இரவு ஒன்பது முப்பது மணி அளவில் சென்னை வேப்பேரி டவுட்டன் சாலையில் ஒரு சொகுசு கார் நீண்ட நேரமாக போக்குவரத்துக்கு இடையூறாக நின்று கொண்டிருந்தது. அதேவேளையில் சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் பூபதி பணியை முடித்துவிட்டு அவ்வழியே வீடு திரும்பியுள்ளார். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அந்த சொகுசு காரை எடுக்கும்படி அதில் இருந்தவர்களிடம் அவர் கூறியுள்ளார். அதற்கு அந்த காரில் இருந்த நபர் காவலர் பூபதியை பார்த்து நீ யார் இதை கேட்க உன் வேலையை பார்த்து செல் என்று கூறியுள்ளார்.
உடனே, தலைமை காவலர் பூபதி முதலில் நீ யார்? ஏன் இங்கு இடையூறாக சாலையில் காரை நிறுத்தியுள்ளாய்? என்று கேட்டிருக்கிறார். அதற்கு காரில் இருந்த நபர், நான் யார் தெரியுமா? என் ஸ்டேட்டஸ் என்ன தெரியுமா? என்னையே காரை எடுக்க சொல்றியா? என்று சத்தம் போடவே, அந்த காரில் இருந்த பெண்ணிடம் தலைமை காவலர், அம்மா இந்த காரை எடுக்கச் சொல்லுங்கள். தேவையில்லாத வாதம் வேண்டாம் என்று கூறியதற்கு, உடனே அந்த பெண், நான் யார் தெரியுமா என்று கேட்கவும், நீ யாராக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை என்று தலைமை காவலர் கூறியுள்ளார்.
என்னையே தெரியாதா? நான்தான் தமிழ் நாட்டையே கலக்கிய ஜல்லிக்கட்டு, பிக் பாஸ் ஜூலி. என்னை பார் என்று ஆணவமாக பேசியிருக்கிறார். அதற்கு தலைமை காவலர் நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிற காரை அகற்ற வேண்டும் என்று தான் கூறினேன் என சொன்னதற்கு, ஜூலியுடன் வந்த ஆண் நண்பர் பிரசாந்த் என்பவரும் அவருடன் வந்திருந்த வேறு இரு நபர்களும் தலைமை காவலர் பூபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். வாக்குவாதம் முற்றி ஜூலியின் ஆண் நண்பர்கள் தலைமை காவலர் பூபதியை தாக்கியதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின் அவர் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதேபோல ஜூலி தரப்பினரும் காவலர் மீது அதே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். காவலர் என்று தெரிந்தும் காவலரை தாக்கிய நபர்கள் மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறது தலைமை காவலர் பூபதி தரப்பு.
சம்பவம் தொடர்பாக நடிகை ஜூலி நக்கீரனுக்கு அளித்த விளக்கம்:
கடந்த திங்கட்கிழமை இரவு ஒன்பதரை மணிக்கு நடந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் சம்பந்தமும் இல்லை என்று நடிகை ஜூலி நக்கீரனுக்கு விளக்கம் அளித்தார். அவர் மேலும், ‘’ சம்பவம் நடந்த திங்கட்கிழமை இரவு பட வாய்ப்பு தொடர்பாக ஒரு பிரபல இயக்குனரை சந்தித்துவிட்டு நண்பருடன் வந்தேன். வீட்டுக்கு செல்ல சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அவர் என்னை காரில் டிராப் செய்தார். பிறகு நான் என் வீட்டுக்கு செல்ல எக்மோர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கடைசி ட்ரெயின் மூலம் வீட்டுக்கு சென்றேன்.
அந்த வேலையில் தான் என் நண்பர் போன் செய்தார். இதுபோல போலீசார் ஒருவர் அவரிடம் தகராறு செய்வதாக என்னிடம் கூறினார். அப்போது நான் ரயில் நிலையத்தில் இருந்தபடியே எனக்கு தெரிந்த பத்திரிகை நண்பர் மூலம் தகவல் கொடுத்தேன். இதை தவறாக புரிந்து கொண்ட மீடியாக்கள் நான் சம்பவம் நடந்தபோது அங்கு இருந்ததாக கூறுவது அப்பட்டமான பொய். வேண்டுமென்றால் அந்த நேரத்தில் நான் சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருப்பது அந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல அந்த வேளையில் என் நண்பரிடம் நான் போனில் பேசிக்கொண்டிருந்தேன் என்பது என் காலத்திலிருந்து தெரியும்.
சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் நான் இல்லை. வந்த போலீஸ்காரர் யார் என்று எனக்கு தெரியாது அதேபோல சில மீடியாக்களிலும் பிரபல தின நாளிதழிலும் என் ஆண்நண்பர் பெயர் கூட தப்பாக பதிவு செய்துள்ளார்கள். பிரசாந்த் என்ற எந்த ஒரு நண்பரும் எனக்கு தெரியாது. சம்பவம் நடந்தபோது என்னை டிராப் செய்துவிட்டு சென்ற என் நண்பர் இப்ரான் என்பவர்தான் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர். அவரும் அவருடன் சேர்ந்து தகராறில் ஈடுபட்டவர் என்று கூறப்படும் தலைமை காவலரும் புகார் மனுவை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது. நான் காவல் நிலையம் கூட செல்லவில்லை . என் பெயரையும், புகழையும் கெடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் ஒரு கூட்டம் செய்த சதி வேலைதான் இந்த தவறான செய்தி என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது’’ என்று நடிகை ஜூலி நக்கீரனுக்கு பேட்டி அளித்தார்.