![Judgment adjourned in Ariyalur student case](http://image.nakkheeran.in/cdn/farfuture/QBRlTVW8Fu_cfblYzN--eYQbLkM6mYtFj46VvIcxu9I/1643372966/sites/default/files/inline-images/0000000000_3.jpg)
அரியலூர் மாணவி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மாணவி பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோ எடுக்கப்பட்ட செல் ஃபோன் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுதொடர்பாக பாஜக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் நேற்று விசாரணை அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது. அதில், 'பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் மதம் மாற்றம் உள்ளிட்ட புகார்கள் சம்பந்தப்பட்ட பள்ளியில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவியின் தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவியின் பெற்றோர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
![Judgment adjourned in Ariyalur student case](http://image.nakkheeran.in/cdn/farfuture/0He9ghCVbAU38X41hc0NpKxwG5ICrvuNZOjB6aIOgzk/1643373076/sites/default/files/inline-images/High%20Court%20Madurai%20Bench%20%281%29_1.jpg)
இவ்வழக்கில் விசாரணை முறையாக வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படுகிறது என்று தமிழக அரசு வாதத்தை முன்வைத்தது. மாணவியின் வீடியோவை எடுத்த முத்துவேல் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை எனத் தெரிவித்த அரசு தரப்பு, தமிழகத்தில் பிரச்சனையை உருவாக்கவே மாணவியின் இறப்பிற்குப் பிறகு வீடியோ பரப்பப்படுகிறது. உண்மையிலேயே நீதியை விரும்பியிருந்தால் அந்த வீடியோவை எடுத்த அன்றே வெளியிட்டிருக்கலாமே. வீடியோவை ஆய்வு செய்த தடயவியல் துறையினர் அறிக்கை தர 15 நாட்கள் அவகாசம் கோரியுள்ளனர் என்ற வாதத்தை முன்வைத்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற கிளை நீதிபதி, தீர்ப்பு தேதியை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.