சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஒரு வருடத்திற்கு மேல் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ள நிலையில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன.
இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் நாளை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றதாக கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் வழக்கில் அமலாக்கத்துறை செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்காக இன்று அவரை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் குற்றச்சாட்டு பதிவைத் தள்ளிவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குற்றச்சாட்டு பதிவை மேற்கொள்ளக்கூடாது தள்ளிவைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
'உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் வழக்கு வரும் 12ஆம் தேதி தான் விசாரணைக்கு வர இருக்கிறது. வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் 14 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. எனவே செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்த வேண்டும். அவ்வாறு ஆஜர்படுத்தப்படவில்லை என்றால் காணொளி காட்சி மூலம் அவரை ஆஜர்படுத்துங்கள்' என நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.