Skip to main content

“நாளொன்றுக்கு 15 முதல் 25 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி!” - ஈரோடு ஆட்சியர் தகவல்!

Published on 08/01/2021 | Edited on 08/01/2021

 

"Only 15 to 25 people per day will be vaccinated" Collector who inspected the corona vaccine Erode

 

கரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பூசி கண்டறியப்பட்டு அவற்றை நாடு முழுவதும் பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு, அதற்கான தடுப்பூசி ஒத்திகை முகாம்களை நடத்திடவும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுக்க எல்லா மாவட்டத்திலும் இன்று தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்திலும் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்கள் நடைபெற்றன. 


ஈரோடு, அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற தடுப்பூசி ஒத்திகை முகாமினை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார். தடுப்பூசிக்கு வருபவர்களுக்கான விசாரணை அறை, தடுப்பூசி அறை, ஓய்வெடுக்கும் அறை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து பயிற்சி மருத்துவர் ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தும்படி  ஒத்திகைப் பார்க்கப்பட்டது. 

 

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய  மாவட்ட ஆட்சியர் கதிரவன், “ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நேற்று மட்டும் 28 நபர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 908 நபர்கள் நோய்ப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 13 ஆயிரத்து 483 நபர்கள் குணமடைந்து வீடுதிரும்பி இருக்கின்றனர். மேலும் தற்போது, 280 நபர்கள் சிகிச்சைபெற்று வருகிறார்கள். 


மாவட்டத்தில் 5 மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்கள் நடைபெற்றது. முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்களுக்கும், இரண்டாம் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும், மூன்றாம் கட்டமாக ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்ப் பாதிப்புள்ள 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நான்காம் கட்டமாக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளது. 


தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள விரும்புபவர்கள், ஆன்லைன் மூலமாகவோ, அரசு சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்துகொள்ளலாம். தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசிகளை இலவசமாக செலுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.  நாளொன்றுக்கு 15 முதல் 25 நபர்களுக்கு மட்டும் செலுத்தப்படும். இந்தத் தடுப்பூசி இரண்டு முறை செலுத்திக்கொள்ள வேண்டுமென்பதால், முதல்முறை போட்டுக்கொள்ளப்பட்டது குறித்தும் இரண்டாம் முறை போட்டுக்கொள்ள வேண்டிய தேதியும் செல்ஃபோன் மூலம் தெரிவிக்கப்படும். 
 

cnc


ஏனைய தடுப்பூசிகளைப் போல் உடனடியாக செலுத்தக் கூடிய தடுப்பூசி இல்லையென்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்தத் தடுப்பூசிகள் செலுத்தப்படும். அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை. இருந்தபோதிலும் மாவட்டத்திலுள்ள கோழிப் பண்ணைகள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளித்து பாதுகாப்புடன் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகள், கேரள மாநிலத்திலிருந்து வரும் வாகனங்கள், கோயம்புத்தூர், திருப்பூரிலிருந்து வரும் வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உதவியுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்