பரமத்தி வேலூர் அருகே ஆடு மேய்க்கச் சென்ற பட்டதாரி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த ஜேடர்பாளையம் அருகில் உள்ள வீ.கரப்பாளையத்தைச் சேர்ந்த விவேகானந்தன் மனைவி நித்யா (28). பி.காம்., (சிஏ) பட்டதாரியான இவர், கடந்த மார்ச் 11 ஆம் தேதி ஆடு மேய்க்கச் சென்றிருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியான 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர். நித்யா கொலை வழக்கில், வெல்ல தயாரிப்பு ஆலைகளில் வேலை செய்து வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் மூன்று பேருக்கு தொடர்பு உள்ளதாகவும் அவர்களிடம் விசாரிக்கக் கோரியும் நித்யா குடும்பத்தினர் தரப்பில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த கொலைக்குப் பிறகு, வீ.கரப்பாளையம், சரளைமேடு, வி.புதுப்பாளையம் பகுதிகளில் சிலரின் வீடுகள், ஆலை கொட்டகைகள், டிராக்டர் மீது மர்ம நபர்கள் தீ வைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மே 13 ஆம் தேதி அதிகாலை, அதே பகுதியைச் சேர்ந்த எம்ஜிஆர் என்கிற முத்துசாமி என்பவருக்குச் சொந்தமான கரும்பாலையில் வேலை செய்து வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் பலத்த தீக்காயம் அடைந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் (19) என்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்பிக்கள் தலைமையில் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். குற்றத்தடுப்புச் செயல்களில் கோட்டை விட்டதாக அந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், மாவட்ட எஸ்பி கலைச்செல்வன், பரமத்தி வேலூர் டிஎஸ்பி கலையரசன், திருச்செங்கோடு டிஎஸ்பி மகாலட்சுமி ஆகியோர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். இது ஒருபுறம் இருக்க, நித்யா கொலை வழக்கை உள்ளூர் காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார். இதையடுத்து, ஜேடர்பாளையம் காவல்நிலையத்தில் இருந்து நித்யா கொலை வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டன.
தற்போது சிபிசிஐடி காவல் ஆய்வாளர் பிரபா, நித்யா கொலை குறித்து புதிதாக வழக்குப்பதிவு செய்து, மே 22 ஆம் தேதி முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளார். முதல்கட்டமாக நித்யாவின் கணவர் விவேகானந்தன் அவருடைய அண்ணன் பூபதி மற்றும் சம்பவத்தன்று வீட்டில் இருந்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். அவர்கள் அளித்த வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.