Skip to main content

கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு 3 தேசிய தரச் சான்றிதழ்கள்!

Published on 21/01/2025 | Edited on 21/01/2025
3 National Quality Certificates for Cuddalore Government General Hospital

கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தேசிய தர ஆய்வுக் குழுவினர், முழு தர ஆய்வு மேற்கொண்டனர். இதில் தேசிய தர உறுதி தரநிலைகள் (National Quality Assurance Standards), பிரசவ அறை தர மேம்பாட்டு முயற்சி( Labour Room Quality Improvement Initiative) மற்றும்  குழந்தை சுகாதார சேவைகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நோக்கம் (Mission to Ensure Quality and Safety of Child Health Services) ஆகிய தரத் திட்டங்களின் கீழ், 20 துறைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன் முடிவு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதில் இம்மருத்துவமனை 92 சதவீத மதிப்பெண்ணுடன், மூன்று திட்டங்களிலும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சென்னை, கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தரச் சான்றுகளை வழங்கினார். கடலூர் அரசு தலைமை மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு சான்றுகளைப் பெற்றுக் கொண்டனர்.

இச்சான்று 3 வருடங்களுக்கானதாகும். இம்மருத்துவமனையின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும்,மேலும் சேவையின் தரத்தை ஊக்குவிக்கவும் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு எடுத்த முயற்சியாலும், மாவட்ட ஆட்சியரின் வழி காட்டுதல், இணை இயக்குநரின் (மருத்துவம் மற்றும் குடும்ப நலம்) ஊக்குவிப்பு மற்றும் மருத்துவமனையின் அனைத்து ஊழியர்களின் ஒருங்கிணைந்த உழைப்பு மூலம் இந்த தரச் சான்றிதழ்கள் பெறமுடிந்தது என்று மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் அசோக் பாஸ்கர் கூறினார். 

சார்ந்த செய்திகள்