மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ரயில்வே ரோட்டில் வசித்து வருபவர் தன்ராஜ். இவர், தருமகுளத்தில் நகை அடகு கடையை பகுதி நேரமாகவும், தங்கம், வெள்ளி விற்பனையை மொத்த வியாபாரமாகவும் செய்து வருகிறார். நேற்று (27 ஜன.) காலை 6 மணி அளவில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர், தன்ராஜ் வீட்டில் பூகுந்து அவரை தாக்கியுள்ளனர். அப்போது தடுக்க வந்த அவரின் மனைவி ஆஷா மற்றும் அகில் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் வீட்டில் இருந்த 17 கிலோ தங்கம், கார், ஹார்டிஸ்க் என பலவற்றையும் திருடி சென்றனர்.
இந்த வழக்கில் ரமேஷ், மனீஷ் என்கிற இரு கொள்ளையர்கள் பிடிபட்ட நிலையில், மணிப்பால் சிங் என்ற கொள்ளையன் போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்றதால் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டான். கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளைக்கு மூலக் காரணமாக இருந்தது கும்பகோணம் பகுதியில் செருப்புக் கடை வைத்திருக்கும் கருணாராம் என்பதைக் கண்டுபிடித்து, அவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
தற்போது மூன்று பேரும் இன்று (28.01.2021) மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், இரண்டு பேர் வைத்தீஸ்வரன் கோவில் காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்ததாக கூறப்படுகிறது. வழுக்கி விழுந்து காயமடைந்த ரமேஷ், மனீஷ் ஆகியோர் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு காவல்நிலையத்தில் வழுக்கி விழும் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.