மோசடி வழக்கில் கைதான ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணனுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் தனபால். இவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த கனகராஜின் உடன்பிறந்த அண்ணன் ஆவார். கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவங்களில் கனகராஜ் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆத்தூர் - சென்னை புறவழிச்சாலை பகுதியில் சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். சர்ச்சைக்குரிய இந்த வழக்கில் முக்கிய தடயங்களை அழித்ததாக தனபால் மற்றும் அவருடைய சித்தி மகன் ரமேஷ் ஆகிய இருவரையும் கொடநாடு வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.
இது ஒருபுறம் இருக்க, கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி, நில மோசடி புகாரில் தனபாலை மேச்சேரி காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவருக்கு, ஆக. 7ம் தேதி மாலை திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை சிறை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தொடர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.