Skip to main content

பாபா ராம்தேவ், சத்குரு கருத்துகள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை: ஜெயக்குமார்

Published on 28/06/2018 | Edited on 28/06/2018


ஸ்டெர்லைட் குறித்த ராம்தேவ் கருத்து பற்றியோ சத்குரு கருத்து பற்றியோ எங்களுக்குக் கவலை இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் காப்பர் உருக்கு ஆலை குறித்து கருத்து தெரிவித்த ஜக்கி வாசுதேவ், நமக்கு தேவையான காப்பரை நாமே உற்பத்தி செய்யாவிட்டால், நாம் சீனாவிடம் இருந்துதான் அதனை வாங்க வேண்டும். சுற்றுச்சூழல் மீறல்கள் என்பது சட்டப்பூர்வமாக வெளிப்படையாக பேசப்பட வேண்டிய விஷயம். அதேசமயம் பெரும் வியாபாரத்தை முடக்குவது என்பது பொருளாதார தற்கொலை என தெரிவித்திருந்தார்.

 

 

முன்னதாக இதேபோல், சர்வதேச சதிகாரர்கள் இந்தியாவின் தெற்கில் வேதாந்தாவின் ஆலையில் அப்பாவி உள்ளூர் மக்களால் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். ’நாட்டிற்கான தொழில் வளர்ச்சி கோயில்களாகும்’ அவை மூடப்படக்கூடாது என பாபா ராம்தேவ் கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஸ்டெர்லைட் குறித்த பாபா ராம்தேவ், ஜக்கி வாசுதேவ் கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. இனி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது. அது குறித்து ஒரு ஸ்திரமான முடிவை தமிழக அரசு எடுத்துவிட்டது. ராம்தேவ் கருத்து பற்றியோ சத்குரு கருத்து பற்றியோ எங்களுக்குக் கவலை இல்லை. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது’ என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்