Skip to main content

பாமகவே தடுப்பணை கட்டும்: ராமதாஸ் எச்சரிக்கை

Published on 26/02/2018 | Edited on 26/02/2018
ramados


 

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது முகநூல் பதிவில், கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் பணிகளை அரசு தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் பாமகவே தடுப்பணை கட்டும் என்று எச்சரித்துள்ளார்.
 

கேள்வி: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலை அடுத்த ஒற்றர்பாளையம் என்ற  இடத்தில் கொள்ளிடத்தில் தற்காலிக தடுப்பணை கட்டும் பணிகளை விவசாயிகள் தொடங்கியிருக்கிறார்கள். இது குறித்த உங்கள் கருத்து என்ன?
 

பதில்:      விவசாயிகளின் முயற்சியை பாராட்டுகிறேன். வரவேற்கிறேன். அதேநேரத்தில் உழவர்களின் நலன்களை பாதுகாப்பதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டதையே இது காட்டுகிறது.காவிரியிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கின் போது திறந்து விடப்படும் தண்ணீரை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்வதற்காக 110 கி.மீ நீளம் கொண்ட கொள்ளிடத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை வீதம் குறைந்தபட்சம் 20 தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்று பா.ம.க வலியுறுத்தி வருகிறது. கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2014&ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 500 டி.எம்.சி. தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக வீணாக கடலில் கலந்திருக்கிறது.
 

      கொள்ளிடத்தைக் காப்பதற்காக தடுப்பணைகளைக் கட்ட வேண்டும் என்று நோக்கத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழக அரசோ கொள்ளிடம் ஆற்றை முற்றிலுமாக  அழித்து விடும் நோக்கத்துடன் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மணல் குவாரிகளை திறக்க அனுமதி அளித்திருக்கிறது. கொள்ளிடத்தில் பல இடங்களில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இது ஒருபுறமிருக்க கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும்  முகத்துவாரம் வழியாக கடல் நீர் கொள்ளிடம் ஆற்றுக்குள் நுழைந்து வருகிறது. கொள்ளிடம் கடலில் கலக்கும் பகுதியில் தடுப்பணை கட்டி இதைத்தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்கவில்லை.
 

     இதனால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. முகத்துவாரம் அமைந்துள்ள அளக்குடியில்  தொடங்கி 20 கிலோ மீட்டர் அளவுக்கு கடல் நீர் உள்நுழைந்திருக்கிறது. சந்தப்படுகை, திட்டுப்படுகை, அனுமந்தபுரம், முதலைமேடு உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.  கடல் நீர் உட்புகுந்ததால் நிலத்தடி நீரும் உப்பாக மாறிவிட்டது. இதனால், குடிப்பதற்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். மேலும், இப்பகுதிகளில் உள்ள 10,000 ஏக்கர்  விளைநிலங்கள் உவர் நிலங்களாக மாறி விட்டன.
 

     கடலூர், நாகை மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நோக்குடன் நாகை மாவட்டம், குமாரமங்கலத்திற்கும், கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும் இடையில், கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி. நீரை தேக்கும் வகையில், 400 கோடி ரூபாயில் கதவணையுடன்கூடிய தடுப்பணை கட்டப்படும் என்று 04.08.2014 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால், அதன்பின் மூன்றரை ஆண்டுகள் ஆகியும் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
 

      இந்த தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாகத் தொடங்க  வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் 18.06.2017 அன்று கொள்ளிடத்தில் மிகப்பெரிய அளவில்  போராட்டம் நடத்தப்பட்டது.  அப்போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரத்திலும்  தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதைத் தொடர்ந்து கொள்ளிடம்ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரப்பகுதியான, கடலூர் மாவட்டம், மேலதிருக்கழிப்பாளையம் (கவரப்பட்டு), நாகை மாவட்டம் அளக்குடி கிராமத்திற்கும் இடையில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட 117 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்,  கொள்ளிடம் ஆற்றில் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீரை உப்புநீராக மாற்றுவதை தடுக்கும் வகையில்அங்கும் தடுப்பணை கட்ட வேண்டும் என்று 24.06.2017 அன்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டார்.  ஒரு மாதத்திற்குள் தடுப்பணைக் கட்டப்படாவிட்டால் பாட்டாளி மக்கள் கட்சியே அங்கு தடுப்பணை கட்டும் என்று எச்சரிக்கை விடுத்தார். 
 

      இதனிடையே, 16.08.2017 அன்று கடலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மக்களுக்கு ஏராளமானத் திட்டங்களை அறிவிப்பதாகக் கூறி, ஜெயலலிதா அறிவித்த கொள்ளிடம் தடுப்பணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் பணிகள் தொடங்கும் என்றும்,  கொள்ளிடம் முகத்துவாரத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராயப்படும் என்றும் அறிவித்தார். அதைத்  தொடர்ந்து தான் கொள்ளிடத்தில்  பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தடுப்பணை கட்டும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
 

       அதன்பின் 6 மாதங்களாகியும் எந்த பணியும் தொடங்கப்படாத நிலையில் தான் விவசாயிகள்  முகத்துவாரத்திலிருந்து  20 கி.மீ உள்ளே காட்டுமன்னார் கோவிலை அடுத்த ஒற்றர்பாளையம் என்ற  இடத்தில் தற்காலிக தடுப்பணை கட்டும் பணியை தொடங்கியுள்ளனர். அவர்களின் இந்த முயற்சிக்கு  பா.ம.க. ஆதரவு அளிக்கிறது. இதன்பிறகாவது அரசு விழித்துக் கொண்டு கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் பணிகளை தொடங்க வேண்டும். இல்லாவிட்டால்  கொள்ளிட முகத்துவாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில்  பாட்டாளி மக்கள் கட்சியே  தடுப்பணை கட்டும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்