அண்மையில், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள வயலோகம் கிராமத்தில் ஒரே தெருவில் வசித்த சுமார் 15 பள்ளி மாணவ, மாணவிகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இதில் நித்தீஸ்வரன் (7) என்ற 3 ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையை சார்ந்த அதிகாரிகள் ஆய்வுகள் செய்த பின் தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதே போல தற்போது மேட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் 5 மாணவிகள் மற்றும் பரம்பூரில் 6-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி என 6 மாணவிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகள், புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாணவிகளுக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பதைக் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அருணா மேட்டுப்பட்டி கிராமத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் வரவழைத்து முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அந்த கிராமத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வழங்கினாலும் அப்பகுதி மக்கள் அங்குப் பள்ளியின் பின்பக்கம் உள்ள குடிநீர் குளத்தில் இருந்தே தண்ணீர் எடுத்துச் சமைக்கவும், குடிக்கவும் பயன்படுத்தி வந்துள்ளனர். பள்ளியிலும் அதே தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்தது. தற்போது அந்த தண்ணீரை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதனிடையே பொதுமக்கள், தண்ணீர் தொட்டியில் இருந்து குழாயில் வரும் தண்ணீரில் சமைத்தால் சோறு நிறம் மாறிவிடுவதால், வழக்கமாகக் குளத்தில் இருந்து நீரை எடுத்துப் பயன்படுத்தி வந்ததாகக் கூறுகின்றனர்.
இந்த ஆய்வை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அருகில் உள்ள அங்கன்வாடியில் ஆய்வு செய்த போது அங்குக் காலாவதியான உணவுப் பொருட்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்பு, குழந்தைகளுக்குத் தரமான உணவு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்திய ஆட்சியர் காலாவதியான உணவுப் பொருட்களை வெளியேற்றவும் உத்தரவிட்டார்.