தமிழ் நாட்டிலேயே அதிகமான இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் மாவட்டம் புதுக்கோட்டை தான். சுமார் 300 வாடிவாசல்கள் திறக்கப்படுகிறது. தை முதல் நாளில் தொடங்கி வைகாசி, ஆனி மாதங்கள் வரை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. அதிகமான காளைகளும் காளைகளை அடக்கும் வீரர்களும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகம்.
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு அனுமதிக்கான போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது முதலமைச்சர் முதல் போட்டியை அலங்காநல்லூரில் தொடங்கி வைக்க முயன்றும் முறையான அனுமதி கிடைக்க வேண்டும் என்று திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் முதல் ஜல்லிக்கட்டை அமைச்சர் விஜயபாஸ்கர் பல தடைகளை கடந்து தனது சொந்த ஊரான ராப்பூசல் கிராமத்தில் அவசர அவசரமாக நடத்தினார். இதில் சில உயிர்பலிகளும் நடந்தது. ஆனால் அதன் பிறகு தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
‘
இந்த நிலையில் இந்த ஆண்டில் தொடங்கிய ஜல்லிக்கட்டு ஒவ்வொரு கிராமமாக தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்திலேயே மிகப்பெரிய அளவிலான அதிக காளைகளும் களையர்களும் பங்கேற்ற விராலிமலை ஜல்லிக்கட்டை தானே முன்னின்று தொடங்கி நடத்தினார். இதில் 1800 காளைகள் பங்கேற்றது. பல அமைச்சர்கள் காணவந்தனர். கார், பைக் என்று பரிசுகளும் அள்ளிக் கொடுக்கப்பட்டது.
இதே போல தானும் தமிழக அமைச்சரகளை அழைத்து வந்து பிரமாண்ட ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று திட்டமிட்ட அதிமுக ந.செ. பாஸ்கர் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆலோசனையில் பிரமாண்ட விளம்பரங்கள் செய்தார். புதுக்கோட்டை நகரில் தனக்கு எதிராக ஒபிஎஸ் அணியை சேர்ந்த மாஜிக்களான் கார்த்திக் கொண்டைமான், ராஜசேகர் தரப்பு செயல்படுவதாகவும் அவற்றை முறியடிக்க ந.செ பாஸ்கர் தகுதியான ஆள் என்றும் நினைத்த அமைச்சர் விஜயபாஸ்கர் ந செ கேட்டுக் கொண்டது போல பல அமைச்சர்களையும் அழைத்து வருவதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் இன்று ந.செ பாஸ்கரின் ஊாரான புதுக்கோட்டை கோயில்பட்டி மலைய கருப்பர் கோயில் பரிசு ஜல்லிகட்டு போட்டிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அருகில் அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ் மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், சி.வி சண்முகம், வெல்லம்மண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்ட பலரும்கலந்து கொண்டு காளைகள் சீறிப்பாய்வதை ரசித்து வருகின்றனர்.
இந்த ஜல்லிக்கட்டில் சுமார் 1200 காளைகளும் சுமார் 300 காளையர்களும் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் கணேஷ், மாவட்ட எஸ்.பி செல்வராஜ், மற்றும் மாவட்டத்தில் உள்ள அத்தனை அரசு துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் அவ்களின் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர் என்று பாராட்டிய ந.செ தொடர்ந்து அத்தனை துறை அதிகாரிகளுக்கும் சிறப்பு பரிசுகளை அமைச்சர்கள் கையால் வழங்கி வருகிறார். பரிசு வாங்கும் பலரும் அமைச்சரின் கால் வரை குனிந்து மரியாதை கொடுத்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டுகளால் காவிரி போராட்டம் ஏனோ வெளியே தெரிவதில் குறைவாகவே உள்ளது என்ற முனுமுனுப்பும் கேட்கிறது.