மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 70 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் 73 நாட்களாக தலைநகர் டெல்லியில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இன்று (06.02.2021) நாடு தழுவிய 'ஜக்கா ஜாம்' என்ற சாலை மறியல் போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர்.
இந்த 'ஜக்கா ஜாம்' சாலை மறியல் டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் நடத்தப்படவில்லை எனவும் விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே இந்த சாலை மறியல் போராட்டம் நாடுமுழுவதும் நடைபெறும் எனவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் இந்தப் போராட்டத்தின்போது அவசரத் தேவைக்காக வரும் ஆம்புலன்ஸ் மற்றும் பெண்கள், குழந்தைகள் வரும் வாகனங்கள் ஆகியவை மறிக்கப்படாது. அதேபோல் அத்தியாவசியப் பொருட்களை எடுத்து வரும் வாகனங்களும் மறிக்கப்படாது எனவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகம் புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் 'ஜக்கா ஜாம்' போராட்டத்தில் ஈடுபட்ட விவசயிகள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் கடலூரில் அண்ணா மேம்பலம் அருகே அகில இந்திய விவசயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். அதேபோல் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூரில் மறியலில் ஈடுபட்ட விவசயிகள் கைது செய்யப்பட்டனர்.