ஜேடர்பாளையம் பெண் கொலை சம்பவம், அதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரிக்க காங்கிரஸ் கட்சி சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்த ஜேடர்பாளையம் அருகே உள்ள வீ.கரப்பாளையத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தன். விவசாயி. இவருடைய மனைவி நித்யா (28). இவர் கடந்த மார்ச் 11ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை இறுக்கிக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெண்ணின் உறவினர்கள் தரப்பில் இந்த கொலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் மூன்று பேருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து ஜேடர்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடியிருப்புகள், கரும்பாலைகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, தீ வைப்பு சம்பவங்களில் மர்ம நபர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அங்கு பதற்றமான சூழல் உருவானதை அடுத்து 800க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நித்யா கொலை வழக்கின் உண்மை நிலையை அறிய காங்கிரஸ் கட்சி சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைத்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சித்திக், செல்வகுமார், அர்த்தனாரி, மணி, வீரப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. மேச்சேரி பழனிசாமி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், சம்பந்தப்பட்ட கிராமங்களில் நேரில் சென்று விசாரித்து பாதிக்கப்பட்ட மக்களின் நிலை, வன்முறைக்கான காரணம், பிரச்சனைக்கான தீர்வு அடங்கிய அறிக்கையை கட்சித் தலைமைக்கு சமர்ப்பிக்கும்படி கே.எஸ்.அழகிரி கேட்டுக் கொண்டுள்ளார்.