நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இதயொட்டி அப்படத்தின் இயக்குநர் ஹரி இன்று வேலூர் விருதம்பட்டில் உள்ள திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தார் அப்போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.
முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வேலூர் எனக்கு சென்டிமென்ட்டான ஊர் இங்கிருந்து தான் திரைக்கதைகளை எழுதுவேன். எனக்கும் வேலூருக்குமான நெருக்கம் அதிகமாக உள்ளது. ரத்தினம் என்னுடைய 17 வது படம் நடிகர் விஷாலை வைத்து இயக்கும் மூன்றாவது படமாகும் இப்படம் வெற்றி பெறும். வழக்கமாக எனது படம் பல மாவட்டங்களை சார்ந்திருக்கும். வட மாவட்டங்களை மையகப்படுத்தி படம் ஒன்று இயக்க திட்டமிட்டேன்.
அதன்படி ஆந்திரா - தமிழக மாவட்ட எல்லையான வேலூர் மாவட்டத்தில் இப்படத்தை இயக்கி உள்ளேன். மாநில எல்லைகளின் பிரச்சினை இந்த படத்தில் காட்டி இருப்பேன். இளைஞர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் குடும்பப் பாங்காகவும் அமைந்துள்ளது. பழைய படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆவது மகிழ்ச்சி அளிக்கிறது. பழைய படத்திற்கு ஆதரவு அளிக்கும் போது எங்களை மென்மேலும் ஊக்குவிக்கிறது. மீண்டும் நாங்கள் தரமான படங்கள் இயக்குவதற்காக எங்களை பணி செய்ய வைக்கிறீர்கள்” என்றார்.
ரத்னம் ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை இடம் பெற்றிருப்பது குறித்து கேட்டதற்கு, “படத்துக்கு தேவை என்பதால் மட்டுமே சில கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. இது படத்தின் தேவையை கருதியே பயன்படுத்துகிறோம். மேலும் பொது மக்களுக்கு மிக நெருக்கமாக ரியாலிட்டியுடன் எடுக்க வேண்டும் என்பதால் இத்தகைய போக்கை கடைபிடிக்கிறோம். எனது கடந்த படமான யானை படத்துக்கு இங்கு வந்திருந்தேன். படம் வெற்றி பெற்றது இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும். ரத்தினம் படம் தமிழகத்தில் 750 ஸ்கிரீன்களில் வெளியிடப்படுகிறது. மக்களுக்கு நல்லது செய்வதற்காக நடிகர்கள் சினிமாக்கு வருவது சந்தோசம் தான்.
என்னுடைய படங்களில் குடும்ப செண்டிமெண்ட் கட்டாயமாக இருக்கும். இதுவே நமது கலாச்சாரமாக எண்ணி அனைத்து படத்திலும் அதை வலுவாக வைத்துள்ளேன். கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அதை பார்க்கும்போது எனக்கும் ஆசையாக உள்ளது எனது படத்தையும் ரீலீஸ் செய்ய வேண்டும் என்று இதற்கு தயாரிப்பாளர் முடிவு செய்ய வேண்டும். மீண்டும் போலீஸ் கதையாம்சம் கொண்ட படத்தை இயக்க திட்டம் வைத்துள்ளேன்” என்றார்.
லோகேஷ் யுனிவர்ஸ் போன்று ஹரி யுனிவர்ஸ் வர வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு, “அது அவருடைய ஸ்டைல். எனக்கு அதுபோன்ற எண்ணம் இல்லை” என்று பதிலளித்தார்.
வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து பிரமோஷன் தேடுவது குறித்து கேட்டதற்கு, “தேர்தல் சமயத்தில் வேட்பாளர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று மக்களை சந்திக்கிறார்களே அதுபோலத்தான் நாங்களும் ஒரு படைப்பை உருவாக்கி அதனை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல இது போன்ற பிரமோஷனை நாடுகிறோம்” என்றார்.