நந்தீஸ் & சுவாதி மரணத்தை ஆணவக்கொலையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று ஓசூர் உதவி ஆட்சியரிடம் (ஆர்டிஓ) கபாலி, காலா படங்களின் இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஓசூர் அருகே, ஆணவக்கொலை செய்யப்பட்ட நந்தீஸின் சொந்த ஊரான சூடுகொண்டப்பள்ளிக்கு ஓசூர் ஆர்டிஓ விமல்ராஜ் நேற்று (நவம்பர் 17, 2018) நேரில் சென்று, நந்தீஸின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நந்தீஸ் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக கபாலி, காலா படங்களின் இயக்குநர் பா.ரஞ்சித்தும் ஓசூர் வந்திருந்தார்.
அப்போது ஆர்டிஓ விமல்ராஜை சந்தித்த பா.ரஞ்சித், 'நந்தீஸ் - சுவாதி படுகொலையை, சாதி ஆணவக்கொலையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். ஆணவக்கொலைகளை தடுப்பதற்கு உடனடியாக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். இல்லையெனில் போராட்டம் தீவிரமாகும்,' என்றார்.
இதையடுத்து, நந்தீஸின் தம்பதியினரின் கொடூர கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் சாமுவேல்ராஜ், இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் தலைமையில், ஓசூர் ஆர்டிஓவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதைப் பெற்றுக்கொண்ட ஆர்டிஓ, உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சூடுகொண்டப்பள்ளி கிராமத்திற்கும், நந்தீஸ் குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
எஸ்சி, எஸ்டி சிறப்பு சட்டத்தின் கீழ் இந்த கொலை வழக்கில் 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், 120 நாள்களுக்குள் நீதிமன்ற நடவடிக்கைகளை முடித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ஜெய்பீம், டிஒப்எப்ஐ ஆகிய இயக்கங்கள் சார்பிலும், கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி, நூறுக்கும் மேற்பட்டோர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி மறுத்ததால், வாயில் முன்பு தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
டிஎஸ்பிக்கள் மீனாட்சி (ஓசூர்), சங்கர் (தேன்கனிக்கோட்டை) ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி (ஹட்கோ), முருகன் (சூளகிரி), எஸ்ஐக்கள் கண்ணன், பார்த்திபன், உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஓசூர் ராம் நகரிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆணவக்கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கவுசல்யா, எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, ஓசூர் திமுக முன்னாள் நகர செயலாளர் மாதேஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கனியமுதன், மாநில துணை செயலாளர் வன்னியரசு, அமைப்பு செயலாளர் கோவேந்தன், தொகுதி செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அசம்பாவிதங்களைத் தடுக்க, உள்ளூர் போலீசாருடன் நக்சல் தடுப்புப்பிரிவு போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.