முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மைத்துனரும் அனைவராலும் முரசொலி செல்வம் என்று அழைக்கக்கூடிய கலைஞரின் குடும்பத்தைச் சேர்ந்த மருமகனுமான செல்வம் அவர்கள் இயற்கை எய்தினார். இதனை அறிந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் சினிமா நட்சத்திரங்களும் அமைச்சர்களும் அவரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சார்ந்த புகழேந்தி நேரில் சென்று முரசொலி செல்வம் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். பெங்களூரில் இருந்த போது பல ஆண்டு காலம் அவரோடு இருந்த நட்பை அவர்கள் உருக்கமாக முதல்வரிடம் கூறியதாக தெரிகிறது. அதேபோன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, முதல்வரின் மருமகன் சபரீசன் மற்றும் அமைச்சர்கள் பலரிடத்திலும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். செல்வி செல்வம் மற்றும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் புகழேந்தி பேசுகையில், ''கர்நாடக மாநிலத்திலும் திமுக அதிமுக என இரண்டு கட்சிகள் தமிழகத்தில் உள்ள அரசியல் போல அரசியல் செய்து கொண்டிருந்த நிலைப்பாட்டில் சிறிய தகராறுகள் வரும். அதுபோன்று ஏற்பட்ட நிகழ்வில் அது சம்பந்தமாக அவர் என்னை சந்திக்க வேண்டும் என்று கூறினார். நானே அவரிடம் அன்பாக உங்கள் அலுவலகத்திற்கு வருகிறேன் என்று சொல்லி வசந்த நகரில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்றேன். என்னை வரவேற்ற செல்வம் அவர்கள் பின்னர் சில ஆலோசனைகளை கூறினார். அதில் ஓசூரை தாண்டி திமுக அதிமுக அரசியல் வேகமாக நடக்கட்டும். நாம் இங்குள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய சிறுபான்மை மக்களாக நாம் இங்கே இருக்கிறோம். நமக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் வேண்டாம். உங்களைப் பொறுத்தவரை மிக வேகமாக காணப்படுகிறீர்கள். ஆகவே நாம் எல்லாம் ஒன்றாக இணைந்து இங்கே தமிழ் மக்களுக்கு பொதுத் தொண்டுகளை மேற்கொள்வோம் என ஆலோசனை கூறினார். அதனை கேட்டு நெகிழ்ந்த நான் அதையே ஏற்று கொண்டேன். பிற்காலத்திலும் அங்குள்ள தமிழர்கள் நலனுக்காக பாடுபடுவதை மட்டுமே கருத்தில் கொண்டேன். அன்றைய தினம் அவர் சொன்னது என்றைக்கும் எனது வாழ்நாளில் மறக்க முடியாது. திராவிட இயக்கத்திற்காக அவர் ஆற்றிய பணிகள் என்றும் நமது நெஞ்சங்களில் நீடித்து நிலைத்திருக்கும்''என்றார்.
தொடர்ந்து புகழேந்தியை நக்கீரன் சார்பில் தொடர்புகொண்டு மேலும் செல்வம் அவர்களுடன் பழகிய சில அனுபவங்களை கேட்ட பொழுது அவர் மேலும் கூறியதாவது, 'தமிழ் சினிமா, தமிழ் செய்தித்தாள், தமிழ் சேனல்கள் என முற்றிலுமாக கர்நாடகத்தில் முடக்கப்பட்ட பொழுது அதை எதிர்த்து குரல் கொடுத்தபோது கன்னட வெறியர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது தங்கவயல் சட்டமன்ற உறுப்பினர் பக்தவச்சலத்தை அழைத்துக் கொண்டு பெங்களூர் வந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களிடம் நேரில் சந்தித்து மனு ஒன்றினை புகாராக அளித்தேன். விவரமாக எடுத்துக் கூறினேன். மிகவும் வேதனையடைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம், கர்நாடக அரசு தலைமைச் செயலரிடம் நேரடியாக பேசினார். குடியரசு தலைவர் இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க சொன்னதாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க சொன்னதாலும் அன்றைய உள்துறை அமைச்சர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கர்கே அவசரக் கூட்டத்தை கூட்டினார்கள்.
எங்களோடு போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உடனடியாக தமிழ் சேனல், சினிமா, தமிழ் செய்தித்தாள் வெளிவர ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு பின்னர் அதை பொறுத்துக்கொள்ள முடியாத கன்னட வெறியர்கள் ஜெய நகரில் இருந்த எனது வீட்டை சூறையாடினார்கள். எனது குடும்பத்தாரும் தாக்கப்பட்டனர். இதனையறிந்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா கர்நாடக முதல்வர் எஸ்எம்.கிருஷ்ணாவுடன் பேசி பாதுகாப்பு வழங்கக்கோரி கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். இதையறிந்த கலைஞரும் எனது வீட்டை தாக்கியதை கண்டித்து தமிழர் என்பதால் புகழேந்தி தாக்கப்பட்டாரா என்கின்ற தலைப்பில் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கை வெளியான அன்று விடியற்காலை இப்படி கலைஞர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என்று செல்வம் புகழ்ந்து என்னிடம் தெரிவித்தார்கள். அதன் பின்னர் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் முரசொலி செய்தித்தாள்களை எடுத்து வந்து வீட்டிலிருந்த என்னிடம் கொடுத்து நேரில் ஆறுதலை கூறினார்கள். அப்போது முரசொலி செல்வம் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு விசாரித்தார்கள். ஆறுதல் கூறினார்கள். பெங்களூரில் வெளியாகும் மாலை தமிழ் நாளிதழ், தினச்சுடர் நிறுவனர் மறைந்த அன்னார் பா.சு மணியும், தமிழ் அமைப்புகளும் முரசொலி செல்வம் அவர்களோடு பழகி வந்தது மறக்க இயலாது' என புகழேந்தி நினைவு கூர்ந்தார்.