வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே CPS திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்த முறையைக் கைவிட்டு காலமுறை ஊதியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையானது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஊர்வலமாக வந்து 500க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்தை சந்தித்தனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களை காவல்துறையினர் வாகனங்களில் அழைத்துச் சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.