![jacto geo](http://image.nakkheeran.in/cdn/farfuture/eaStlYOZN2DBMxtjB8J6V63r2EX5VLVk0qoNTM6j_0g/1548671214/sites/default/files/inline-images/jacto-geo_2.jpg)
சேலம் சரகத்தில் ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 162 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22ம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. அரசுப்பள்ளிகளில் கற்பித்தல் பணிகள் முடங்கியுள்ளன. தேர்வுகள் நெருங்கியுள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் இத்தகைய அலட்சியப் போக்கிற்கு பொதுமக்கள் தரப்பில் இருந்தும் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உயரதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை அனைத்து வகை அரசுப்பள்ளிகளிலும் 4723 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது துறைரீதியாக விளக்கம் கேட்டு 17பி பிரிவின் கீழ் நோட்டீஸ் அளித்து, முதன்மைக் கல்வி அலுவலர் உஷா உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, கடந்த 25ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தை தலைமையேற்று நடத்தியதாக 72 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது போக்குவரத்துக்கு இடையூறு செய்தது, அனுமதிக்கப்பட்ட இடத்தை விட்டு வேறு இடத்தில் சட்ட விரோதமாக கூடியது. உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் நீதிபதி தனபால் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறை சென்ற ஆசிரியர்களில் 57 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் உஷா தெரிவித்துள்ளார்.
மேலும், தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்காக இதுவரை 1020 நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவர்கள் தவிர வருவாய்த்துறை ஊழியர்கள் 2 பேர், வேளாண்மைத் துறை ஊழியர்கள் 10 பேரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பால் பிரின்சிலி ராஜ்குமார் கூறியுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் போராட்டத்தைத் தூண்டியதாக ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த 58 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 36 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 36 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் போராட்டத்தை முன்னின்று நடத்தியதாக 25 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கைதானவர்களில் 18 பேர் அதிரடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டதாக சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் சரகத்தில் மொத்தம் 162 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.