மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பெருங்களத்தூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில் ஆலப்பாக்கம் பகுதியில் முதலை ஒன்று சுற்றுசுவர் அருகே பதுங்கி உள்ளதை காலையில் அந்த பகுதியில் சென்ற மக்கள் கண்டு அதிர்ந்தனர். உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் தாம்பரம் வனத்துறை அதிகாரிகள் அங்கு வந்துள்ளனர். தொடர்ந்து முதலையை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதேபோல் வேளச்சேரியில் இருந்து வனவிலங்கு மீட்பு குழுவினர் அந்த பகுதிக்கு வந்துள்ளனர்.
புயல் மழையின் போது இரவு நேரத்தில் நடு சாலையில் முதலை ஒன்று வலம் வரும் வீடியோ காட்சி ஒன்று அண்மையில் வைரலாகி இருந்தது. அந்த முதலை எங்கே சென்றது; என்ன ஆனது என அந்தப்பகுதி மக்கள் சற்று அச்சத்தில் உறைந்திருந்தனர். இந்நிலையில் அந்தப் பகுதிக்கு 100 மீட்டர் தொலைவில்தான் தற்போது இந்த முதலை கண்டறியப்பட்டுள்ளதால் சாலையில் உலாவிய முதலைதான் இந்த முதலையாக இருக்குமோ என்ற எண்ணம் வனத்துறைக்கு எழுந்துள்ளது. அடுத்த கட்டமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் அந்த முதலையை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.