
இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி செலுத்த வேண்டும் என்ற வணிக வரித்துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் விஜய் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் நேற்று (13.07.2021) நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருந்தது. அதில், “சமூகநீதிக்குப் பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோவாக இருக்க வேண்டும்; ரீல் ஹீரோவாக இருக்க கூடாது” எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக சமுக வலைதளங்களில் நடிகர் விஜய்க்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்கள் குவிந்துவருகின்றன. இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி, நடிகர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரத்திடம் இதுகுறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், ''இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் தனக்கு வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை. வரி குறைப்பு கேட்டவர்களை நடிகர் என பார்ப்பது தவறு'' என்றார்.
மேலும் பேசிய அவர், ''தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது. பிரிக்கவும் காங்கிரஸ் கட்சி விடாது. கொங்குநாடு எனக் கூறி தமிழ்நாட்டைப் பிரிக்க நினைப்பது விஷமத்தனமானது'' என்றார்.