
பாலியல் புகாரில் ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் 'குடும்பத்தை அவமானப்படுத்தும் நோக்கில் கொடுக்கப்பட்ட பொய் புகார்' என ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமாரின் மனைவி மனு அளித்துள்ளார்.
சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வந்தவர் டி.மகேஷ்குமார். ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் காவலர், காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து மகேஷ்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ந்து மகேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சங்கர் ஜீவால் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே பெண் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாரணை நடத்தவும் விசாகா கமிட்டியும் அமைக்கப்பட்டது. பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமாரின் மனைவி டிஜிபியிடம் மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''டிஜிபி சாரை பார்த்து பெட்டிஷன் கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு உண்மையிலேயே நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது. நல்லதே நடக்கும். உங்கள் அனைவருடைய சப்போட்டை எதிர்பார்க்கிறேன். குடும்பத்தை அவமானப்படுத்தும் நோக்கில் எங்கள் மீது பொய்யான புகாரை கொடுத்திருக்கிறார்கள். அதை தீர விசாரிக்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. ஒருதலைபட்சமாக ஆக்சன் எடுத்துவிடாமல் விசாரிக்க வேண்டும். விசாகா கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. அது சாதகமாகவும் பாதகமாகவும் இல்லாமல் எது நியாயமோ அது கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள். அதனால் டிஜிபி சாரை சந்தித்து பெட்டிஷன் கொடுத்திருக்கிறோம். ஆதாரத்தை விசாகா கமிட்டி கேட்கும் பொழுது சமர்ப்பிக்கப்படும்''என்றார்.