சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இயங்கி வரும் பல்வேறு மென்பொருள் நிறுவனங்களில் நேற்று சோதனையானது தொடங்கிய நிலையில் இரண்டாம் நாளாக இன்றும் சோதனை தொடர்கிறது.
சமீபகாலமாக வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் ஒவ்வொரு துறையாக கையில் எடுத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. அண்மையில் புதுக்கோட்டையில் மணல் குவாரிகளை நடத்தி வரும் அதிபர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதேபோல் மின்வாரியத்திற்கு உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிலும் வருமானவரித்துறை சோதனை செய்திருந்தது. இந்நிலையில் நேற்று ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு ஐடி அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. சென்னை பெருங்குடி, கந்தன் சாவடி ஆகிய பகுதிகளில் உள்ள மென்பொருள் நிறுவனங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடந்தது.
இரண்டாம் நாளாக இன்றும் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான ஃபிளக்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் ஐடி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்திற்கு தொடர்புடைய சென்னை, ஸ்ரீபெரும்புதூர் புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.