
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் குடிமகன்களுக்கு தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் கடையை மூடக்கோரி நாம் தமிழர் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை என்பது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு நிலுவையில் உள்ளது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் உள்ள பார்களில் உணவு பாதுகாப்பு சட்டம் முறையாக பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி எழுப்பியிருந்தார்.
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது என்ற விவரத்தையும் கேட்டிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பார்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெறவில்லை என்றால் ஏழு நாட்களில் மூடப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து நீதிபதி கிருபாகரன் 'குடி மகன்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை விட அவருடைய பாதுகாப்பு முக்கியம் என்றும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு தரமான உணவு பொருட்கள் குடிமகன்களுக்கு வழங்கப்படுகிறதா' என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் டாஸ்மாக் கடைகளில் இரண்டு மணிக்கு ஏன் திறக்கக் கூடாது என்ற கேள்வியை முன்வைத்தார்.அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் அது அரசின் கொள்கை முடிவு என்று குறிப்பிட்டார் . இதில் என்ன கொள்கை முடிவு என்று கேட்ட நீதிபதி இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளார்.