கச்சத்தீவை மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை நான்கு வாரக் காலத்திற்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கச்சத்தீவை மீட்டெடுக்கவும், கடந்த மாதம் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் சென்னையைச் சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு கச்சத்தீவு ராமேஸ்வரத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. ஆனால் இந்தியா மற்றும் இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. இந்த வழக்கில் கச்சத்தீவில் இருக்கக்கூடிய படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்டவற்றை மீட்கவும், கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை இந்தியாவிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் 'என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதன் சக்கரவர்த்தி நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் தரப்பில், ‘இந்திய மீனவர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழக மீனவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை மத்திய அரசு கொடுத்து வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததில்லை’ என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், 'மத்திய அரசு தரப்பில் இந்திய மீனவர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழக மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடைய விலைமதிப்பற்ற படகு மற்றும் வலைகள் இலங்கை கடற்படையினரால் சேதப்படுத்தப்படுவது வேதனை அளிக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது' எனக்கூறி வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.