நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெளியான முடிவுகளின் அடிப்படையில் அதிமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில் 'மனமாட்சியம் மறந்து ஒன்றாக வேண்டும்' என எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சியில் இருந்து விலக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வாயிலாக அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு முன்னதாகவே சசிகலாவும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என அறிக்கை வாயிலாக வலியுறுத்தி இருந்தார்.
ஓபிஎஸ் வெளியிட்ட இது தொடர்பான அறிக்கையில் 'ஒற்றைக் குச்சியை உடைப்பது சுலபம்; கத்தை குச்சியை முறிப்பது கடினம். இனியும் தாமதம் சொல்லி தோல்விக்குத் தொண்டர்களைப் பழக்குவது பாவ காரியம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றாக வேண்டும். கட்சியை மீட்டெடுக்க எத்தகைய தியாகத்துக்கும் தயாராகுவோம்' என ஓபிஎஸ் குறிப்பிட்டு இருந்தார்.
தொடர்ந்து நேற்று கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ''அதிமுக தலைவர்களை விமர்சித்த ஒருவரோடு கூட்டணி அமைத்த ஓபிஎஸ்க்கு அதிமுகவினர் ஒன்றுபட வேண்டும் எனப் பேசத் தகுதி இல்லை. அறிவுரைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்திடம் கே.பி.முனுசாமியின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், ''அதிமுக தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்டு இயக்கம். அதைத் தொண்டர்களுக்கான இயக்கமாக எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வரலாற்று சிறப்புமிக்க இயக்கமாக கட்டி காத்து வந்தார்கள். இன்றைக்கு இருக்கிற சூழ்நிலையில் தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதன்படி நடப்பது தான் இயக்கத்திற்கு நல்லது. தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று நினைக்கிறார்கள்'' என்றார்.