Skip to main content

'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நிறைவு'-கலைஞர்களுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 18/01/2025 | Edited on 18/01/2025

 

தமிழ்நாட்டின் கலை பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை சார்பில் 'சென்னை சங்கமம் 2025 - நம்ம ஊரு திருவிழாவின்' இறுதி நாளான இன்று (17/01/2025) சென்னை அண்ணா நகர், கோபுரப் பூங்காவில் நடைபெற்ற கலை விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை நேரில் கண்டு மகிழ்ந்தார்.

கலை விழாவில், விழுப்புரம் “கை கொடுக்கும் கை" குழுவினரின் மல்லர் கம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட கலைஞர்களுக்கும், பம்பை இசை குழுவினருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையேறிச் சென்று பாராட்டினார். நாட்டுப்புற கலைஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து, தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் முதல்வர் தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் மற்றும் கனிமொழி கருணாநிதி எம்.பி நாட்டுப்புற கலைஞர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது, திமுக துணைப் பொதுச்­ செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க. பொன்முடி,  திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா, இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சென்னை வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே.மோகன், தமிழரசி ரவிக்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் நே. சிற்றரசு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்திரமோகன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப. மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா மூன்று ஆண்டுகளாக நடந்தப்பட்டு வருகிறது. அதேபோல, இந்த ஆண்டும் ஜனவரி 13 அன்று சங்கமம் - நம்ம ஊரு திருவிழா தொடங்கியது. சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் கோவில் திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலை நிகழ்ச்சிகளை முரசு கொட்டி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவின் கலை நிகழ்ச்சிகள், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம், அரசு இசைக் கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல் உள்ளிட்ட 18 இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கடந்த 14ஆம் தேதி (14/01/2025) முதல் இன்று (17/01/2025) வரை என 4 நாட்கள் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடைபெற்றது. பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.

சுமார் 1500க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழா  நிகழ்ச்சியில் பங்காற்றினர். மொத்தமாக 75 குழுக்களாகப் பிரிந்து 50 கலை வடிவங்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்து சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழா நிகழ்வில் பங்கேற்ற 1500 மேற்பட்ட கிராமிய கலைஞர்களுக்கு ஒருநாள் சம்பளம் 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய எட்டு நகரங்களிலும் இந்த ஆண்டு சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

சார்ந்த செய்திகள்