18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தனிப் பெரும்பான்மை என்ற நிலையை இழந்து கூட்டணி ஆட்சியையே மத்தியில் பாஜக அமைக்க உள்ளது. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 293 இடங்களில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது.
இதனையொட்டி டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது.இந்நிலையில் சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது பேசிய அவர், ''பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க பிரதமர் மோடி துடிக்கிறார். பிரதமர் மோடி பேசும்போதெல்லாம் காசி, வாரணாசி ஆகிய பெயர்களை உச்சரிக்காமல் பேச மாட்டார். அப்படி பேசியவருக்கு 4 லட்சம் பேர் வாக்களிக்காமல் நிராகரிக்கப்பட்டது ஏன்? இந்தியா முழுவதும் இந்த நிலைதான் இருக்கிறது. எதற்காக மூன்று மணிக்கு மேல் வாக்கு எண்ணும் மையங்களில் நேற்று தாமதப்படுத்தினார்கள்? என்ன காரணம்? தேர்தல் ஆணையம் ரொம்ப தன்னிச்சையாக செயல்படுகிறார்களா? சுதந்திரமாக செயல்படுகிறார்களா? அதன் பிறகு எங்கள் தலைவர்கள் எல்லாம் புகார் கொடுத்த பிறகு வாக்குகளை எண்ண ஆரம்பித்தார்கள்'' என்றார்.
'பல கருத்துக்கணிப்புகள் பொய்யாகி இருக்கிறது' அதுபற்றி உங்கள் கருத்து என்ன என்ற செய்தியாளர் கேள்விக்கு, ''அது கருத்து கணிப்பல்ல, கருத்து திணிப்பு. மோடியால் திணிக்கப்பட்டது. ஊடக, தொலைக்காட்சி உரிமையாளர்களைப் பிடித்து அமலாக்கத்துறையை வைத்து உள்ளே போட்டுவிடுவேன் என மிரட்டி இருப்பார். ஆகையால் அவர் எழுதிக் கொடுத்ததை எல்லாம் சொல்லிவிட்டார்கள்'' என்றார்.
'பல இடங்களில் பாஜக இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது' என்ற செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு, ''அது பாஜக ஓட்டு அல்ல, பாமக ஓட்டு. நேற்று கூட புள்ளிவிவரத்தோடு சொன்னேன். பாட்டாளி மக்கள் கட்சியினுடைய ஓட்டை எல்லாம் தன்னுடைய ஓட்டு என்று சொல்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு வாக்கு வாங்கி இருக்கிறது. பாஜக இரண்டாவது இடம் வந்த இடத்தில் எல்லாம் பாருங்கள் பாமகவிற்கு வாக்கு வங்கி இருக்கும். இந்த இடங்களில் தான் வந்திருக்கிறார்கள். வேறு இடங்களில் ஏன் இரண்டாவது இடம் வர முடியவில்லை' என்றார்.
'நாம் தமிழர் கட்சி அரசியல் அங்கீகாரம் பெருமளவிற்கு எட்டு சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது' என்று கேள்விக்கு, ''ஆபத்தான விஷயம். இந்த நாட்டில் எது ஆபத்தான விஷயம் என்றால் ஏமாந்துபோன இளைஞர்களெல்லாம் நாம் தமிழருக்கு வாக்களிப்பது தான். சீமான் ஒரு பிரிவினைவாதி தான். ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை இல்லாத ஒருவர்'' என்றார்.