தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பது தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் விருகம்பாக்கம் தொகுதியில் உள்ள காவேரி பள்ளி வாக்குச்சாவடியில் 80 வயது மூதாட்டிக்கு ஓட்டு இல்லை என அதிகாரிகள் மறுக்கப்பட்டதால் அவதிக்குள்ளான மூதாட்டி ஓட்டு போடாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். இதுகுறித்து அந்த மூதாட்டியின் மகன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ''இன்னைக்கு ஓட்டு போடுவதற்கு என் அம்மாவை கூட்டிக்கொண்டு வந்தேன். என் பேர் இசக்கி பாண்டியன். என் அம்மா பேர் செல்லம்மாள். வயது 80க்கும் மேல இருக்கும். ஆனால் அவரது உடல்நிலை சரியாக இருந்ததால் நாங்கள் டூவீலர்லயே கூட்டிவந்துட்டோம். ஆனால் இங்கு வந்தால் வேறு ஒரு வாக்குச்சாவடிக்கு போக சொன்னார்கள். அங்கே போனா இங்க இல்ல அங்க போங்க என சொல்கிறார்கள். அந்த சமயம் பார்த்து ஆளுநர் தமிழிசை அங்கு வந்தாங்க. அவங்ககிட்ட முறையிட்டோம். அவங்க இந்த அம்மாவுக்கு என்ன உண்டோ அதனை க்ளியர் செஞ்சு கொடுங்கன்னு சொன்னாங்க. ஆனா இப்பொழுது அங்கேயும் இங்கேயும் போக சொல்கிறார்கள். தபால் ஓட்டு வாங்கவும் எந்த அதிகாரியும் வரவில்லை. இப்படி எங்களை அலையவிட்டால் இந்த ஜனநாயக நாட்டில் யாருக்கு வாக்கு இருக்கிறது என்பதை யார் முடிவு செய்வார்கள். தேர்தல் கமிஷனா, ஜனாதிபதியா? ஆளுநர் தமிழிசை சொல்லியே நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் யார் சொல்லி எடுப்பார்கள்'' என்றார்.