தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 6 கிராம ஊராட்சிகளில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. தலா 2 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 146 வீடுகள் காட்டாமலேயே வீடுகள் காட்டியதாகப் பல கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இதனையடுத்து இந்த புகார் தொடர்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பட்டமங்கலம், ஆதமங்கலம், வலிவலம், கோவில் கண்ணப்பூர் தெற்கு பனையூர் மற்றும் கொடியாலத்தூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். மயிலாடுதுறை பொதுப்பணித்துறை பொறியாளர் ரவிக்குமார் தலைமையிலான அதிகாரிகள், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் அருள்பிரியா உள்ளிட்டவர்கள் நடத்திய ஆய்வில் ஆதமங்கலம் ஊராட்சியில் மட்டும் 39 வீடுகள் கட்டப்படாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மூன்று நாட்களுக்கு மற்ற 5 ஊராட்சிகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக ஆட்சியின் போது பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த பயனாளிகள் வீடுகள் கட்டாமலே வீடு கட்டியதாகக் கணக்குக் காட்டி அதிகாரிகள் பணத்தைக் கையாடல் செய்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.