கிராவல் மண் வெட்டி எடுத்துக் கொள்ள ஒப்பந்தம் விடப்பட்டதில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரின் பேரில், தர்மபுரியில் உள்ள தமிழ்நாடு கனிமவளத்துறை இணை இயக்குநர் சுரேஷ் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் புதன்கிழமை (செப். 14) திடீர் சோதனை நடத்தினர்.
தர்மபுரி நகரம் சூடாமணி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவர், சென்னை கனிமவளத்துறை இணை இயக்குநர் நிலை -2 ஆக பணியாற்றி வருகிறார். சில புகார்களின் பேரில் அவர் தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.
சுரேஷ், ஏற்கனவே சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் துணை இயக்குநர், உதவி இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய சொந்த ஊர் சேலம் ஆகும். தற்போது குடும்பத்துடன் தர்மபுரியில் வசிக்கிறார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு நெருக்கமானவர் என்றும் சொல்லப்படுகிறது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஏரி, குளங்களில் கிராவல் மண் எடுக்க டெண்டர் விடப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் கிளம்பின. இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சுரேஷ், இந்த வழக்கில் தன்னை காவல்துறையினர் கைது செய்யாமல் இருப்பதற்காக நீதிமன்றத்தில் முன் ஜாமீனும் பெற்றார்.
இது ஒருபுறம் இருக்க, சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் புதன்கிழமை (செப். 14) காலை தர்மபுரியில் உள்ள சுரேஷின் வீட்டுக்கு இரண்டு கார்களில் சென்றனர். பத்துக்கும் மேற்பட்ட சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் அவருடைய வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின்போது வெளி ஆள்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மேலும், வாயில் கதவையும் உள் பக்கமாக பூட்டிக்கொண்டனர். அதே பகுதியில் சுரேஷ், புதிதாக ஒரு சொகுசு வீடும் கட்டி வருகிறார். அது பற்றியும் விசாரித்தனர்.
சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கனிமவளத்துறை இணை இயக்குநர் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.