சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (04/10/2021) நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல்துறையின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை (Face Recognition Software) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், காவல்துறை கூடுதல் இயக்குநர் (மாநில குற்ற ஆவணக் காப்பகம்) மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் மூலம் குற்றவாளிகளைக் காவல்துறையினர் கண்டறிய முடியும். குற்றவாளிகள், சந்தேக நபர்கள், காணாமல் போனவர்கள் போன்றோரைப் புகைப்படங்களுடன் ஒப்பிட முடியும். சிசிடிவி பதிவுகளில் உள்ள நபரின் முகத்தை அடையாளம் கண்டறிய வீடியோ பகுப்பாய்வு வசதி ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.