
பத்திரிகைகள் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தமிழக அரசு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள், அவர்களது பேச்சுகளை வெளியிட்டதற்காக, தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சார்பில் ‘தி இந்து’, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’, ‘தினமலர், ‘தினகரன்’, ‘முரசொலி’ உள்ளிட்ட நாளிதழ்கள், மற்றும் ‘நக்கீரன்’வாரமிருமுறை இதழ் ஆகியவற்றின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. குறிப்பாக, கடந்த 2012-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, முரசொலி மீது 20 வழக்குகளும், பிற நாளிதழ்கள் மீது தலா 2 வழக்குகளும் தொடரப்பட்டன.
இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி, ‘தி இந்து’ சார்பில் என்.ராம், கோலப்பன், பத்மநாபன், சித்தார்த் வரதராஜன், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ தரப்பில் சுனில் நாயர், சந்தானகோபாலன், ‘தினமலர்’ தரப்பில் ஆர்.கிருஷ்ண மூர்த்தி, ‘முரசொலி’ தரப்பில் செல்வம், ‘தினகரன்’ தரப்பில் ஆர்.எம்.ஆர். ரமேஷ், ‘நக்கீரன்’ தரப்பில் நக்கீரன் ஆசிரியர் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், ‘‘ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான பத்திரிகைகள் தங்கள் கடமையைச் செய்கின்றன. இதற்காக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டிருப்பது கருத்துரிமையைப் பறிப்பதாகும்’’ என்று கூறி, அவதூறு வழக்குகளை ரத்து செய்து தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் அமர்வில் இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், ‘‘நாளிதழ்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை, தனி நீதிபதி முறையாகப் பரிசீலிக்காமல் ரத்து செய்துள்ளார். இந்த வழக்குகள் தொடர்பாக, அரசு தகுந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், நாளிதழ்கள் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.