சிறைக் கைதிகளைச் சந்திக்க வரும் அவரது உறவினர்கள், அவர்களிடம் பேசுவதைப் போல ஒரு கொடுமையை வேறு எங்கும் பார்க்க முடியாது. ஏனென்றால், ஒரே நேரத்தில் பல கைதிகள் தங்களின் உறவினர்களிடம் பேசுவார்கள். அந்த சத்தத்தில் ஒருவர் பேசுவது மற்றொருவருக்குக் கேட்பதே மிகக் கடினமாக இருக்கும். ஆனாலும், அதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டு சத்தமாகப் பேசுவார்கள். அதுமட்டுமல்லாமல் கைதிகள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிய உளவுத்துறையும் படாதபாடு படும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் தற்போது 2000-க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகளும் விசாரணைக் கைதிகளும் இருக்கின்றனர். கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள் மனு அடிப்படையில் தான் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அந்த முறையை மாற்றுவதற்காக மதுரை மத்திய சிறையில் இண்டர்காம் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிறையில் இருக்கும் கைதிகளுக்கு எந்தவித தொந்தரவும் இன்றி அவர்களது உறவினர்களிடம் பேசுவதற்காக இண்டர்காம் தொலைபேசி வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 70,000 ஆயிரம் ரூபாய் செலவில் 15-க்கும் மேற்பட்ட இண்டர்காம் தொலைப்பேசிகள், கண்ணாடி தடுப்பு அறைகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு முற்றிலும் நவீனமாக மாற்றப்பட்டுள்ளது.
இதுவரை வேலூர், புழல் மற்றும் கோயம்புத்தூர் மத்திய சிறைகளில் மட்டுமே இண்டர்காம் தொலைப்பேசி வசதி இருந்து வந்தது. ஆனால் தற்போது மதுரை மத்திய சிறையிலும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேர்காணல் அறையை மதுரை சரக துணைத் தலைவர் பழனி திறந்து வைத்தார்.
இந்த திட்டம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் பேசும்போது ''தனிநபர் உரிமையின் அடிப்படையில் கைதிகள் பேசும் பேச்சுக்கள் ரெக்கார்டு செய்யப்படாது'' எனத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.