![nn](http://image.nakkheeran.in/cdn/farfuture/EjzcadnKFGhwfiLg0CiKXZREC7pef-2d96lhbs2i7kM/1713448659/sites/default/files/inline-images/a6089.jpg)
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முடிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அந்தந்த சர்க்கிள் உள்ளிட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர்.
விடுதியில் தங்கி இருந்தவர்கள் விவரங்களை சேகரித்தனர். இதேப்போல் திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதியின்றி கூட்டம் கூட்டக்கூடாது. பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.