மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை முன்னாள் தமிழக நிதி அமைச்சரும் தற்போதைய தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ''நான் நிதி அமைச்சராக இருக்கும் நேரத்தில் ஒன்றிய நிதியமைச்சரிடமும் சி.பி.டி.டி சேர்மனிடமும் கோரிக்கை வைத்தேன். தகவல் பரிமாற்றத்திற்கு ஜிஎஸ்டி கவுன்சில்களுக்குள் எல்லா மாநிலத்துடைய தகவல்களும் மற்ற மாநிலங்களுக்கு பரிமாறச் செய்வதால் தவறுகளைக் குறைத்து உண்மை நிலையை அறியச் செய்து சிறப்பித்தோமோ, அதேபோல் வருமான வரி கட்டுபவர்களுடைய தகவல் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டால் அதை வைத்து நலத்திட்டங்கள் மற்றும் பல சேவைகளுக்குப் பயன்படுத்தலாம் எனக் கோரிக்கை வைத்தேன். இதனால் யாருக்கு எந்த சூழ்நிலை இருக்கிறது என்று கண்டறிந்து அதற்கு ஏற்ப அரசினுடைய திட்டங்களில் சரி செய்யலாம்.
இப்பொழுது இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டுக்கு சுமார் 35 லட்சம் இன்கம் டேக்ஸ் செலுத்துவர்களின் தகவல்கள் கிடைத்துள்ளன. யாரெல்லாம் என்ன டேக்ஸ் கட்டுகிறார்கள் என்ற தகவல் தமிழ்நாட்டுக்கு முதல்முறையாக இந்தியாவிலேயே வழங்கப்பட்டிருக்கிறது. அந்த தகவல் பல திட்டங்களுக்கு குறிப்பாக மகளிர் உரிமை தொகை திட்டம் உட்பட்ட பல திட்டங்களுக்கு மிகவும் பயனாக இருக்கும்'' என்றார்.