![industry in massage center 6 young women rescue](http://image.nakkheeran.in/cdn/farfuture/XjpTpYSgLDUlBKHxeSkdSVb6_Uu9pZps_C7vx21y8Js/1699460032/sites/default/files/inline-images/our-arrest-logo-file_2.jpg)
ஈரோடு மாநகர் பகுதியில் சமீப காலமாக மசாஜ் சென்டர் அதிகரித்து வருகிறது. இந்த மசாஜ் சென்டர்களில் பெரும்பாலும் வட மாநில பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். இதில் ஒரு சில மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து போலீசார் அவ்வப்போது மசாஜ் சென்டர்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களை மீட்டுள்ளனர். மேலும் அதற்கு காரணமான இடைத்தரகர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு சம்பத் நகரில் பகுதியில் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 1000 ரூபாய் முதல் மசாஜ் செய்யப்படும் என கூறி பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில், சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மசாஜ் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த மசாஜ் சென்டரின் ஊழியர்களான ரவிக்குமார், விமல்ராஜ் மற்றும் செல்வின் சச்சு ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 6 இளம்பெண்களையும் மீட்டு, மசாஜ் சென்டரை பூட்டி சீல் வைத்தனர். மேலும் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மசாஜ் சென்டரின் உரிமையாளர் சுமன் சிவாவை தீவிரமாக தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட பெண்கள் அனைவரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.