Skip to main content

கம்யூ. அலுவலகம் மீது தாக்குதல்; கல்லூரி மாணவர் உள்ளிட்ட 4 பேர் கைது

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

Indian Communist office incident 4 people involved

 

சென்னை தியாகராயர் நகரில் உள்ள செவாலியர் சிவாஜி கணேசன் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகம் ‘பாலன் இல்லம்’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் மீது நேற்று இரவு மர்மநபர்கள் கற்கள் மற்றும் பாட்டில்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த தாக்குதல் குறித்து தென்சென்னை மாவட்டச் செயலாளர் சிவா கொடுத்த புகாரின் அடிப்படையில் மாம்பலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்து“குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து தண்டிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தாக்குதலின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்” என தமிழக அரசை வலியுறுத்தி இருந்தார். இதனையடுத்து இந்த தாக்குதலை நடத்தி விட்டு தப்பி ஓடிய மர்மநபர்களை சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு போலீசார் தேடி வந்த நிலையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய விக்னேஷ் உள்ளிட்ட 6 பேரை பிடித்து மாம்பலம் காவல் நிலைய போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை செய்தனர்.

 

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக கம்யூனிஸ்ட் அலுவலகத்தின் பின்புறம் உள்ள நகர்ப்புற குடியிருப்பில் வசிக்கும் பாரதி (வயது 20), பார்த்திபன் (வயது 21), கல்லூரி மாணவர் அலெக்ஸ் (வயது 22) மற்றும் அருண்குமார் (வயது 38) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த 4 பேரும் மதுபோதையில் காவலாளி சுதாகருடன் தகராறில் ஈடுபட்டு கற்கள் மற்றும் பாட்டில்களை வீசியது விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்