தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி அருகில் உள்ள தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் கருப்பசாமி (34). 14 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். பணி நிமித்தமாக கடந்த 19ஆம் தேதி லாடக்கின் கிளேசியர் பகுதியில் சென்றபோது ஏற்பட்ட வெடி விபத்தில் மரணமடைந்தார்.
இத்தகவல் அவரது பெற்றோர் மற்றும் மனைவி தமயந்தி ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டு, ராணுவத்தின் 6 வது பீரங்கிப்படையின் சுபேதார், பழனிசாமியின் தலைமையில் நேற்று கருப்பசாமியின் உடல் விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டது. பின்பு, 13 வது கார்வெல் ரைபிள் கார்டு கமாண்டர் நரேந்திரசிங், ஜூனியர் கமிசன் ஆபீஸர், மன்பர்சிங் தலைமையிலான ராணுவ வீரர்கள் தெற்குத் திட்டங்குளத்திலுள்ள கருப்பசாமியின் வீட்டிற்கு நேற்று மாலை 6.30 மணியளவில் கொண்டு வந்தார்கள்.
அவரது உடலைப் பார்த்து மனைவி, பிள்ளைகள் பெற்றோர், உறவினர் கதறி அழுதனர். அதன்பின் அரசியல் கட்சியினர், அதிகாரிகள், கிராம மக்கள் ஆகியோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், எஸ்.பி.ஜெயக்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். குடும்பச் சடங்குகளுக்கு பின்பு ராணுவ மாரியாதையுடன் 24 குண்டுகள் முழங்க கருப்பசாமியின் உடல் நல் அடக்கம் செய்யப்பட்டது.