ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணியின் இளம் புயல், ‘யார்க்கர் நாயகன்’ நடராஜனுக்கு, சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் கிராம மக்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். செண்டை மேளம் முழங்க, குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். ஐபிஎல் தொடரில், சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது யார்க்கர் பந்துவீச்சு மூலம் எதிரணியைத் திணறடித்தார். அவருடைய பந்துவீச்சு, ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்தது.
இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணியில் நடராஜனுக்கும் முதன்முதலாக வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதுவும், வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக மட்டுமே இடம்பிடித்திருந்தார்.
இந்நிலையில், ஆடும் லெவன் அணியில் பும்ரா, முஹம்மது ஷமி ஆகியோர் அடுத்தடுத்து காயத்தால் அவதிப்பட டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நடராஜனுக்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைத்தது.
ஒரு நாள் தொடரை இந்தியா இழந்த நிலையில், டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. அதில் யார்க்கர் நாயகன் நடராஜனின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அதேபோல் கடைசி டெஸ்டிலும் நடராஜன் அசத்தலாக பந்து வீசி, இந்திய அணி தொடரை வெல்ல முக்கிய பங்காற்றினார்.
ஆஸியில் வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்ததாக இங்கிலாந்து தொடருக்குத் தயாராகி வருகிறது. முன்னதாக ஆஸியில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் தாயகம் திரும்பினர். நடராஜன், ஜன. 21- ஆம் தேதி விமானம் மூலம் பெங்களூரு வந்து சேர்ந்தார். அங்கிருந்து காரில் சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு வந்தார்.
சேலம் - ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள சின்னப்பம்பட்டி சந்திப்புக்கு வந்தவுடன் நடராஜனுக்கு கிரிக்கெட் ரசிகர்கள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள், கிராம மக்கள் என அனைவுரும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். நண்பர்கள் வழங்கிய தேசியக்கொடிக்கு முத்தமிட்டு வரவேற்பை ஏற்றுக்கொண்ட நடராஜன், கொடியை உயரே தூக்கிப்பிடித்து அனைவருக்கும் நன்றி செலுத்தினார்.
சுமார் இரண்டு கி.மீ. தூரத்திற்கு செண்டை மேள வாத்தியங்கள் முழங்க, இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் அவரை ஊர்வலமாக அழைத்து வந்தனர். வழிநெடுகிலும் அவருக்கு மலர் தூவி வாழ்த்து தெரிவித்தனர். தாயார் சாந்தா, தந்தை தங்கராஜ், மனைவி பவித்ரா, தம்பி சக்தி, தங்கைகள் திலகவதி, தமிழரசி, மேகலா, நண்பர் ஜெயபிரகாஷ் ஆகியோர் நடராஜனுக்கு ஆரத்தி எடுத்தனர்.
முன்னதாக, ரசிகர்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் வீடு அருகே நடராஜனுக்கு என தனி மேடை அமைக்கப்பட்டிருந்தது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக சுகாதாரத்துறையினர் மேடைக்கு அனுமதி மறுத்தனர். இதையடுத்து, மேடை அகற்றப்பட்டது. மேலும், கூட்டம் கூடக் கூடாது என்றும் எச்சரித்தனர்.
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியதால் நடராஜன் 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். என்றாலும், சொந்த கிராம மக்கள் திரண்டு வந்து அதிகாரிகளிடம் அவருக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என்று ஒரே குரலில் போராடியதால் வேறு வழியின்றி அதற்கு இசைவளித்தனர்.
ஐபிஎல் தொடரில் விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில்தான், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நடராஜனின் மனைவி பவித்ராவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஐபிஎல் தொடர் முடிந்ததும், குழந்தையைக் கூட பார்க்க வராமல் நேராக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்டார். அதனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு வியாழக்கிழமைதான் (ஜன. 21) குழந்தையைப் பார்த்து, முத்தமிட்டு, கொஞ்சி மகிழ்ந்தார் நடராஜன்.
குழந்தையின் பிஞ்சு கைகளால் பூங்கொத்து கொடுத்து நடராஜனை வரவேற்க பவித்ரா ஏற்பாடு செய்திருந்த நிலையில், நோய்த் தொற்று அபாயம் கருதி, அதற்கு அதிகாரிகள் தடை விதித்ததால் அவருடைய மனைவி ஏமாற்றம் அடைந்தார்.
நடராஜன் கூறுகையில், ''இவ்வளவு பெரிய வரவேற்பு அளிக்கப்படும் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. சொந்த ஊர்க்காரர்கள், நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் சேர்ந்து வரவேற்றது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,'' என்றார்.
ஊடகத்தினர் அவரை பேட்டி எடுக்க முயன்றபோது, இந்திய கிரிக்கெட் வாரியம் பேட்டி கொடுக்கக் கூடாது என்று தடை விதித்துள்ளதாக நடராஜன் தரப்பில் சொல்லப்பட்டது.