இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்தியதற்கும், இந்திய வீரர்கள் 20 பேர் பலியானதற்கும் கண்டனம் தெரிவிக்கும் விதமாக, பலரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நடிகர் பார்த்திபனும்கூட, ‘சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வாங்குவதை தவிர்த்து சீன (வர்த்தக) பெருஞ்சுவரை உடைப்போம்!’ என்று ட்விட்டரில் குமுறியிருந்தார்.
மதுரையில் பா.ஜ.க.வினரோ, சீனா விவகாரத்தை, அரசியலாக்கி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.‘இது ஒன்றும் 1962 அல்ல.. நடப்பது 2020 மோடி ஆட்சி!’ என்றும்,‘இந்தியாவின் அடுத்த அணுகுண்டு சோதனை சீனாவில்தான்!’என்றும் சீறியிருக்கின்றனர்.
1962-ல் ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மத்தியில் இருந்தது. அப்போது, ஒரு மாதம் வரை இந்தியா- சீனா போர் நடந்தது. 1,383 இந்திய வீரர்கள் பலியானார்கள். இந்தியா தோல்வி அடைந்தது. அந்தத் தோல்வியைத்தான், தேசியப் பார்வை துளியுமின்றி, வால்போஸ்டரில் பா.ஜ.க.வினர் குத்திக் காட்டி அரசியல் செய்திருக்கின்றனர். அதாவது, அன்றைய பிரதமர் நேருவைக் காட்டிலும், இன்றைய பிரதமர் மோடி பலசாலியாம்! இந்த அரசியல் அக்கப்போர் என்றுதான் ஓயுமோ?