கள்ளநோட்டை மாற்றுதல், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை மன்னார்குடி காவல்துறையினர் தனியார் விடுதி ஒன்றில் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்துள்ள திருமக்கோட்டை மகாராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன். இவர் மீது கஞ்சா கடத்தல், கள்ளநோட்டு மாற்றுதல் போன்ற பல்வேறு வழக்குகள், பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்தச் சூழலில் மன்னார்குடியை அடுத்த அசேஷம் என்ற பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் மாதவன் தங்கியிருப்பதாக மன்னார்குடி காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க, தனியார் விடுதியில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது விடுதியில் தங்கியிருந்த மாதவனை அடையாளம் தெரியாமல் சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரது அறையை சோதனை மேற்கொண்டபோது அங்கு சுமார் ரூ.2 லட்சத்திற்கும் மேல் 2000 ரூபாய் நோட்டுகள் இருப்பதையும், அந்த நோட்டுகள் அனைத்தும் கள்ளநோட்டுகள் என்பதையும் கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தனர்.
"மன்னார்குடி நகரத்தில் கடந்த சில நாட்களாக இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் இருந்துவருகிறது. கள்ளநோட்டை அச்சடிக்கும் மையமும் மன்னார்குடியிலோ சுற்றுவட்டாரப்பகுதியிலோ இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்துவருகிறது. விசாரணையினை தீவிரப்படுத்தியுள்ளோம். மாதவனிடமிருந்து 2 லட்சம் மதிப்பிலான 2000 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு பணமும் 50 கிராம் கஞ்சா மற்றும் அவர் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளோம்" என்கிறார்கள் காவல்துறையினர்.
இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் பரவ, மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் கள்ளநோட்டாக இருக்குமோ என்ற சந்தேகத்தால் பீதியில் உறைந்துள்ளனர்.