![nn](http://image.nakkheeran.in/cdn/farfuture/FJucQGMPJhtSmT2agOW7fJj7Aw_03YC_xQcWT1LTqCU/1665057686/sites/default/files/inline-images/n1084_0.jpg)
'திறமையற்ற அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது. பொம்மை போன்ற முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார்' என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''எய்ம்ஸ் பணிகள் விரைவில் தமிழகத்தில் தொடங்கும் என மத்திய அமைச்சர் சொல்லி இருக்கிறார். பார்ப்போம். நீர் பற்றாக்குறை உள்ள தமிழகத்திற்கு கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தின் மூலமாக அந்தப் பற்றாக்குறையை போக்குவதற்காக ஜெயலலிதா இருக்கும்பொழுதே இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு முயற்சி செய்தார்கள். துரதிஷ்டவசமாக ஜெயலலிதா மறைந்தாலும், அவரது வழியில் நடைபெற்ற இந்த அரசு பாரத பிரதமரை சந்திக்கும் போதெல்லாம் கோதாவரி காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தது. அதையேதான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவை சந்திக்கும் பொழுது வலியுறுத்தி குறிப்பிட்டு இருந்தேன்.
காவிரியில் மாசுபட்ட நீர் கலப்பதால் நீர் அசுத்தமாக இருக்கிறது. எனவே காவிரி நீர் மாசுபடுவதை தடுப்பதற்கான 'நடந்தாய் வாழி காவிரி' என்ற திட்டத்தை நீங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இதனை முதல் பிரதமர் கவனத்திற்கு எடுத்துச் சென்று அதனை நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் கோரிக்கையை நான் நேரடியாக அமைச்சரிடம் வைத்தேன். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி. இவை தொடர்கதையாக இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதை தடை செய்வதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சந்திப்பில் தெரிவித்து இருந்தேன். திறமையற்ற அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது. பொம்மை போன்ற முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார். சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. இதையெல்லாம் தடுக்க இந்த அரசு தவறிவிட்டது. இனியாவது விழித்து சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டும். குற்றங்கள் நிகழ்வதைத் தடுக்க வேண்டும்'' என்றார்.