தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை - மருமகன் சபரீசன் வீடு உள்ளிட்ட இடங்களில், துணை ராணுவப்படையின் பாதுகாப்புடன் தற்பொழுது வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைக்கு திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தனது மகள் வீட்டில் ஐ.டி.ரெய்டு நடந்து வரும் நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் கூறியதாவது, "எனது மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் புகுந்து ரெய்டு நடத்தி வருகின்றனர். ரெய்டு போன்ற சலசலப்புக்கு எல்லாம் திமுக அஞ்சாது. மிசாவையே பார்த்த நான், ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன். வருமான வரி சோதனை மூலம் அதிமுகவை மிரட்டுவது போன்று திமுகவை மிரட்ட முடியாது. ஐ.டி. ரெய்டு மூலம் திமுகவினரை வீட்டுக்குள் முடக்கி வைக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. ஐ.டி. ரெய்டு பண்ண பண்ண, திமுக கிளர்ந்தெழுந்துக் கொண்டேயிருக்கும்" என்றார்.