Skip to main content

மெரினா தள்ளுவண்டிக் கடைகள் டென்டர் விவகாரம்: உரிய நடைமுறைகளைப் பின்பற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 14/12/2020 | Edited on 14/12/2020

 

highcourt chennai

 

சென்னை மெரினா கடற்கரையில் ஏற்கனவே இருந்த கடைகளை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்கப்படவுள்ள 900 தள்ளுவண்டிக் கடைகளுக்கான டென்டரை இறுதி செய்வது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் எம்.எஸ்.ரமேஷ் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது.

 

கடந்த முறை இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், 900 தள்ளுவண்டிக் கடைகள் அமைப்பதற்கான டென்டரை, ஏக்வாட் மற்றும் ஏ.ஐ.ஆர் சிஸ்டம்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கும், தலா 450 கடைகள் வீதம் பகிர்ந்து அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

 

மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஏ.ஐ.ஆர் சிஸ்டம்ஸ் சார்பில், உயர்நீதிமன்றம் குறித்த நாட்களின் அடிப்படையில், தங்களால் கடைகளை உரிய நேரத்தில் ஒப்படைக்க முடியாத நிலை உள்ளதால், ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்வதாகவும்,  ஏக்வாட் நிறுவனம் சார்பில், மூன்று மாதத்தில் 900 தள்ளுவண்டிக் கடைகளை விநியோகிக்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஏக்வாட் நிறுவனத்திற்கே முழுவதுமாகப் பணிகளை வழங்க உத்தரவிட்டனர். மூன்று மாதத்திற்குள் 900 தள்ளுவண்டிக் கடைகளையும் சப்ளை செய்யத் தவறினால், ஏற்கனவே குறிப்பிட்டபடி அபராதம் விதிக்கலாம் எனத் தெரிவித்தனர்.

 

புதிய கடைகளைப் பொறுத்தவரை, ஏற்கனவே மெரினாவில் தொழில் செய்பவர்களுக்கு 60 சதவீதமும், புதிதாகக் கடை வைக்க விரும்புவர்களுக்கு 40 சதவீதமும் பிரித்து வழங்க முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்தது. ஏற்கனவே, மெரினாவில் 2 முதல் 3 கடைகள் வைத்திருப்பவர்களை முறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், கடைகள் அமைக்க விரும்புபவர்களுக்கான விண்ணப்பம் டிசம்பர் 21-ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளதாகவும், 2021 ஜனவரி 6-ஆம் தேதி, விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, அதன் பிறகு குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

கடைகள் அமைப்பதற்கான அனுமதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், ஏற்கனவே உள்ள கடைகளை அப்புறப்படுத்துவதில், உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்