திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள ஜங்கலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 49 வயதான சரவணன். இவர் மல்லகுண்டா கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நண்பர்களான ராணுவ வீரர் ராஜீவ் (36), ராமச்சந்திரன் (35), ராஜ்குமார் (29), பார்த்தீபன் (35) மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சக்கி ஆகியோருடன் திருப்பத்தூர் அருகேயுள்ள சுற்றுலாத் தளமான ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றுள்ளார். அங்கு செல்லும்போதே வழியில் இருந்த டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கி சென்றுள்ளனர். குளிக்கும் முன் 6 பேரும் மது அருந்தியுள்ளனர்.
குடிபோதையில் அவர்கள், அருவிக்கு வந்திருந்த பெண்களிடம் ஆபாசமாக பேசி கிண்டல் செய்துள்ளனர். நீர் வீழ்ச்சியில் குளித்துவிட்டு மறைவான இடத்தில் உடை மாற்றிக் கொண்டிருந்த பெண்கள் பக்கம் சென்றுள்ளனர். இதில் அதிர்ச்சியான பெண்கள், இவர்களைத் திட்டியுள்ளனர். இதனால், வம்படியாக தகராறு செய்து அந்தப் பெண்களிடம் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட முயன்றுள்ளனர்.
இதனைப் பாார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரின் செல்ஃபோன் எண்ணை தொடர்பு கொண்டு தகவல் கூறியுள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலத்தில் இருந்து சென்ற உத்தரவுப்படி பெருமாப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் ராஜீவ்காந்தியை அங்கே அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் உண்மை என்பதை அறிந்து அதிகாரிகள் ஆலோசனைப்படி காவல்துறைக்கு தகவல் கூறியுள்ளார். அதன்பேரில் குரிசிலாப்பட்டு போலீசார் விரைந்து சென்று குடிபோதையில் பெண்களிடம் தகராறில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர், ராணுவ வீரர்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் சிவனருள் உத்தரவுப்படி திருப்பத்தூர் சார் ஆட்சியர் முனீர், விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பெண்களிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டது உறுதியாகி கிராம நிர்வாக அலுவலர் சரவணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.