திருச்சியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் சோமரசன்பேட்டை, அதவத்தூர்பாளையம் பகுதியில் காணாமல்போன மாணவியின் சடலம் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மதியம் ஒரு மணிவரை வீட்டில் இருந்த மாணவி கழிப்பிடம் செல்வதற்காக முள்ளிகரும்பூர் பழைய பாலம் பகுதிக்கு மாணவி சென்றதாக கூறப்பட்ட நிலையில், மாணவியின் தந்தை பெரியசாமியும் மற்றும் மாணவியின் தாயாரும், உறவினர்களும் தேடிவந்தனர். இந்நிலையில் மாணவியின் சடலம் பாதி எரிக்கப்பட்ட நிலையில் முள்ளிகரும்பூர் பழைய பாலம் பகுதியில் கிடந்ததாக கூறப்பட்ட நிலையில், மாணவியின் ஆடையை வைத்து அடையாளம் கண்டு கொண்ட பெற்றோர் இது குறித்து தகவல் கொடுக்க, சோமரசன்பேட்டை காவல் ஆய்வாளர் சிபி சக்கரவர்த்தி இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மாணவியின் சடலத்துக்கு அருகே தீப்பெட்டி, மண்ணெண்ணெய் கேன் போன்றவைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி கோகிலா தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
மாணவி கொலைக்கான காரணம் குறித்து தகவல் தெரியாத நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அண்மையில் புதுக்கோட்டை, ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, குளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் திருச்சியில் ஒன்பதாம் வகுப்பு சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அப்பகுதியில் விசாரித்த பொழுது, அந்த பகுதியை ஒட்டி மர அரவை மில் ஒன்று உள்ளதாகவும், அதில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் வேலை செய்யும் நிலையில், இயற்கை உபாதை கழிக்கும் அப்பகுதிகளில் அரவை மில்லில் பணிபுரியும் சில வடமாநில இளைஞர்கள் எட்டிப்பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது, இதுகுறித்து அங்கு பிரச்சனை எழுந்த நிலையில், அந்த அரவை மில் முதலாளியிடம் இதுகுறித்து அப்பகுதியினர் கேட்ட பொழுது சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தாம் நடவடிக்கை எடுப்பதாக கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.