ஈழத்தில் போர் உக்கிரமாக நடந்து வந்தபோது தாய் தமிழகத்திற்கு குடும்பத்துடன் அகதியாய் வந்தவர் லோகநீதி, இவர் கன்னியாகுமரி மாவட்டம் பகோடு அடுத்த விலவன்கோடு இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தார் 33 வயது லோகநீதி, மனைவி செல்வி இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். லோகநீதி பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில் லோக நீதிக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தொடர்ந்து குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
![INCIDENT IN ERODE](http://image.nakkheeran.in/cdn/farfuture/M63QZr5e6sp66l_d3m-XKWC2fnanhuJW6kmiOHQPhy8/1574424848/sites/default/files/inline-images/04_7.jpg)
இதனால் வெறுப்படைந்த லோகநீதி சென்ற இரண்டு மாதத்திற்கு முன்பு மனைவியோடு கோபித்துக்கொண்டு ஈரோடு மாவட்டம் ஈஞ்சம்பள்ளி இலங்கை அகதிகள் முகாமில் இருக்கும் தனது தாயாருடன் வந்து வசித்து வந்தார். இந்தநிலையில் தொடர்ந்து மன உளைச்சலுடன் இருந்த லோகநீதி வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று மாலை தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டின் கழிவறைக்கு சென்று திடீரென மண்ணெண்ணையை தனக்குத்தானே உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் இன்று சிகிச்சை பலனின்றி லோகநிதி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். சொந்த நாட்டில் வாழ வழியின்றி அகதியாய் வந்தும் குடும்ப பிரச்சனையால் தன்னை தானே மாய்த்துக்கொண்ட லோகநீதியால் அவரது இரண்டு குழந்தைகளும் இப்போது பரிதவிப்பில் உள்ளது.